
நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 135 சட்டப்பேரவைத் தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இந்த நிலையில், நேற்று (மே 14) இரவு 07.00 மணிக்கு பெங்களூருவில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் 135 சட்டப்பேரவை உறுப்பினர்கள், சுயேச்சை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், முதலமைச்சரைத் தேர்வு செய்யும் அதிகாரம், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு சட்டப்பேரவை உறுப்பினர்களையும், தனித்தனியே அழைத்து பேசிய மேலிடப் பார்வையாளர்கள், அவர்களிடம் முதலமைச்சர் தேர்வு குறித்த கருத்துகளை எழுத்துப்பூர்வமான கடிதத்தையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.
மேலிடப் பார்வையாளர் ஜித்தேந்திர சிங் கூறுகையில், “கர்நாடக முதலமைச்சரைத் தேர்வு செய்வது குறித்து காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் நள்ளிரவு வரை ஆலோசித்தோம்; சட்டப்பேரவை உறுப்பினர்களின் கருத்துகளை அறிக்கையாக காங்கிரஸ் தலைவரிடம் சமர்ப்பிப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு எதிர்கொள்ள வேண்டிய முக்கிய சவால்கள்!
“நான் டெல்லி செல்லவில்லை; என்ன செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் செய்துவிட்டேன்; பிறந்தநாள் என்பதால் விழாக்கள், பூஜைகளில் பங்கேற்பதற்காக பெங்களூருவில் இருக்கிறேன். முதலமைச்சர் யார் என்ற முடிவை தலைமையிடம் விட்டுவிட்டோம், அவர்கள் முடிவெடுப்பர்” மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.


