குடிமகன்கள் கடும் அதிருப்தி, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகரில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் (TASMAC) மதுபானக் கடைகளில், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட ஒவ்வொரு பாட்டிலுக்கும் கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாகக் குடிமகன்கள் தரப்பில் கடுமையான புகார்கள் எழுந்துள்ளன.

அரசின் தொடர் எச்சரிக்கையையும் மீறி இந்த வசூல் வேட்டை நடைபெறுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எம்.ஆர்.பி விலையை மீறிய வசூல்:
தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு எம்.ஆர்.பி (MRP) எனப்படும் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையைத் தாண்டி கூடுதலாகப் பணம் வசூலிக்கக் கூடாது என்பது விதிமுறையாகும்.
ஆனால், ராசிபுரம் நகரில் உள்ள பல டாஸ்மாக் கடைகளில் இந்த விதிமீறல் எவ்வித ஒளிவுமறைவுமின்றி அப்பட்டமாக நடைபெற்று வருகிறது. மதுபானங்களை வாங்கச் செல்லும் வாடிக்கையாளர்களிடம், ஒவ்வொரு பாட்டிலுக்கும் 10 ரூபாய் கட்டாயமாக விட்டுக் கொடுக்கப்படுகிறது.
காற்றில் பறக்கவிடப்படும் அரசு எச்சரிக்கை:
“கூடுதல் விலை வசூலிக்கும் டாஸ்மாக் ஊழியர்கள் மீது கடுமையான துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்; அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள்” எனத் தமிழக அரசும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையும் சமீபத்தில் பலமுறை கடும் எச்சரிக்கை விடுத்திருந்தன.
மேலும், விலைப்பட்டியல் மற்றும் புகார் எண்கள் கடைகளின் முன்பு வெளிப்படையாக ஒட்டப்பட்டிருக்க வேண்டும் என்ற உத்தரவும் உள்ளது. இருப்பினும், ராசிபுரத்தில் உள்ள விற்பனையாளர்கள் இந்த உத்தரவுகளைச் சற்றும் பொருட்படுத்தாமல் தங்களின் கூடுதல் வசூலைத் தொடர்ந்து வருகின்றனர்.
அன்றாட வாக்குவாதங்கள்:
இது குறித்துத் தட்டிக்கேட்கும் வாடிக்கையாளர்களிடம், “குளிரூட்டப் (Cooling) பயன்படுத்துவதற்கான மின்கட்டணம், பாட்டில்களை இறக்குவதற்கான கூலி” எனப் பல்வேறு காரணங்களைக் கூறி ஊழியர்கள் நியாயப்படுத்துகின்றனர். இதனால், கூடுதல் பணம் தர மறுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் டாஸ்மாக் ஊழியர்களுக்கும் இடையே கடைகளின் முன்பு தினசரி கடுமையான வாக்குவாதங்களும், தள்ளுமுள்ளு சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
நடவடிக்கை பாயுமா?
அரசுக்கு வருவாயை ஈட்டித் தரும் அதே வேளையில், வாடிக்கையாளர்களைச் சுரண்டும் வகையில் செயல்படும் இந்தத் தொடர் வசூல் வேட்டையை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.
சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகமும், டாஸ்மாக் பறக்கும் படை அதிகாரிகளும் ராசிபுரம் நகரில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரகசிய திடீர் ஆய்வு மேற்கொண்டு, விதிமீறலில் ஈடுபடும் ஊழியர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் ஒட்டுமொத்த கோரிக்கையாகும்.
தொடர் புகார்கள் மீது துறை சார்ந்த உயர் அதிகாரிகள் எத்தகைய நடவடிக்கையை முன்னெடுக்கப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.
ஈரோட்டில் பரபரப்பு – பள்ளி காலை உணவில் சாணி பவுடர் கலக்கத் தூண்டிய நபர் கைது:
