திருமங்கலம் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி அருகே உள்ள காமராஜர் பொறியியல் கல்லூரியில் படிக்கும் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதுமிக்க வினோத்குமார், கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் டென்னிஸ் விளையாட்டில் அதிக ஈடுபாடு கொண்டவர். இந்நிலையில் ஆன்லைனில் டென்னிஸ் விளையாட்டில் கடந்த சில மாதங்களாகவே கைபேசி மூலம் ரூபாய் 50 ஆயிரத்துக்கு மேல் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலை கல்லூரிக்கு செல்லாமல் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியிலேயே தங்கி உள்ளார் . சக மாணவர்கள் கல்லூரிக்கு வராத வினோத்குமாரை தேடிய போது, அவர் விடுதியில் கதவை பூட்டிக் கொண்டு இருந்ததை அறிந்தனர். இதுகுறித்து சக மாணவர்கள் கல்லூரி ஆசிரியரிடம் தெரிவிக்கவே, கல்லூரி அலுவலர்கள் கதவை உடைத்து பார்த்தபோது, விடுதி அறையினுள் வினோத்குமார், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. காவல்துறைக்கு தகவல் அளித்ததன் பேரில், கள்ளிக்குடி காவல் நிலையத்தினர் உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
