ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வரும் 11-ம் தேதி டெல்லியில் முக்கிய இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த சந்திப்பின் போது இந்திய விமானப்படைக்கு ரஷ்யாவின் Su-57 (எஸ்யு-57) ரக ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை வாங்குவது குறித்து இரு தலைவர்களும் முக்கிய ஆலோசனை மேற்கொள்வார்கள் என ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.


டெல்லியில் வரும் 12 மற்றும் 13-ம் தேதிகளில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அதிபர் புதின் 11-ம் தேதியே டெல்லி வருகிறார்.
முக்கிய பேச்சுவார்த்தை மற்றும் திட்டங்கள்:
பிரதமர் மோடி மற்றும் அதிபர் புதின் இடையிலான இந்த உயர்நிலைச் சந்திப்பில் பாதுகாப்பு, வர்த்தகம், எரிசக்தி, விண்வெளி, கல்வி மற்றும் அணுசக்தி உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் ஆலோசனைகள் நடைபெறவுள்ளன.
Su-57 போர் விமானங்கள்: இந்திய விமானப்படைக்கு Su-57 ரக போர் விமானங்களை வாங்குவது மட்டுமன்றி, அதன் தொழில்நுட்பங்களை இந்தியாவுக்கு வழங்குவது குறித்தும் இரு தலைவர்களும் விவாதிக்க உள்ளனர்.
S-400 ஏவுகணை அமைப்பு: இந்தியாவுக்கு வழங்கப்பட வேண்டிய S-400 ஏவுகணைகள் குறித்து ஆலோசனை நடத்தப்படும். ரஷ்யா அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அணுமின் நிலையம்: கூடங்குளம் அணுமின் நிலைய விரிவாக்கத்திற்கு ரஷ்யா தொடர்ந்து உதவும். மேலும், ரஷ்யாவின் தொழில் நுட்ப உதவியுடன் இந்தியாவில் புதிய அணுமின் நிலையம் அமைப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
பிரம்மோஸ் ஏவுகணை: இரு நாடுகளும் இணைந்து தயாரிக்கும் பிரம்மோஸ் ஏவுகணை உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தகது.
வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகள்:
கச்சா எண்ணெய் ஏற்றுமதி: இந்தியாவிற்கு ரஷ்யாவிடமிருந்து தொடர்ச்சியாக கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் இந்த ஏற்றுமதி புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
ரூபாய் பணப் பரிமாற்றம்: இரு நாடுகளுக்கிடையேயான ரூபாய் அடிப்படையிலான பணப் பரிமாற்றத்தில் உள்ள சில சிக்கல்கள் படிப்படியாக தீர்க்கப்படும்.
இந்திய பொருட்கள் ஏற்றுமதி: ரஷ்யாவிற்கான இந்திய பொருட்களின் ஏற்றுமதி கணிசமாக அதிகரித்து வரும் வேளையில், இரு நாடுகளுக்கு இடையேயான விமானப் போக்குவரத்தை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது.
ரஷ்ய ராணுவத்தில் உள்ள இந்தியர்கள் & உக்ரைன் போர்:
ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றி வரும் இந்தியர்களை கண்டறிந்து அவர்களை மீண்டும் தாயகம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என ரஷ்யா உறுதியளித்துள்ளது.
மேலும், உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் மற்றும் தற்போதைய கள நிலவரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் அதிபர் புதின் விரிவாக எடுத்துரைப்பார் என்றும் திமித்ரி பெஸ்கோவ் கூறியுள்ளார்.
