சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி முதுநிலை மாணவியர் விடுதியில் மாணவிகளின் நகைகள் திருடப்பட்ட சம்பவத்தில், மருத்துவர் போல வெள்ளை கோட் அணிந்து மருத்துவமனை வளாகத்தில் சுற்றித்திரிந்த பெண் ஒருவர் சிக்கியுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில், கடந்த 10 ஆண்டுகளாக இதுபோன்ற திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக தெரிவித்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.
மாணவியர் அறையில் நகைகள் மாயம்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் ஸ்டாலின் அரசு மருத்துவக் கல்லூரியில் குழந்தைகள் நல மருத்துவம் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி முதுநிலை மாணவியர் விடுதியில் தங்கி படித்து வருகிறார்.
சம்பவத்தன்று காலை 8 மணியளவில் மருத்துவமனைக்குச் சென்ற மாணவி, பிற்பகல் 3 மணியளவில் மீண்டும் விடுதி அறைக்குத் திரும்பி தூங்கியுள்ளார். மாலை 5 மணியளவில் எழுந்து பார்த்தபோது, தனது அறையில் வைத்திருந்த சுமார் ஒன்றரை சவரன் தங்கச் செயின் மற்றும் வைரத் தோடுகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதையடுத்து விடுதியில் உள்ள மற்ற மாணவிகளிடமும் விசாரித்தபோது, அவர்களது நகைகளும் காணாமல் போயிருப்பது தெரியவந்தது. மொத்தமாக சுமார் 13 சவரன் தங்க நகைகள் மற்றும் இரண்டு ஜோடி வைரக் கம்மல்கள் திருடப்பட்டதாக கூறப்படுகிறது.
மருத்துவர் போல சுற்றித்திரிந்த பெண்
இந்த நிலையில், ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர் போல வெள்ளை கோட் அணிந்து சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்த பெண் ஒருவரை அங்கிருந்தவர்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்ததாக மருத்துவ மாணவிகளின் வாட்ஸ் அப் குழுவில் தகவல் பரவியது.
இந்த தகவலை பார்த்த நகைகளை பறிகொடுத்த மாணவிகள் காவல் நிலையத்துக்குச் சென்று, பிடிபட்ட பெண்ணை பார்த்துள்ளனர். அப்போது தங்களது நகைகள் தொடர்பான சந்தேகம் இருப்பதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
விசாரணையில் அடையாளம் தெரிந்தது
இதையடுத்து அந்தப் பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்த ஸ்வேதா (39) என்பது தெரியவந்தது.
எம்பிஏ பட்டதாரியான ஸ்வேதா, தனது கணவர் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்ததாகவும், தந்தையும் உயிரிழந்துவிட்டதால் பொருளாதார நெருக்கடியில் சிக்கியதாகவும் போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
“வியர்வை சிந்தாமல் வாழ நினைத்தேன்”
பொருளாதார பிரச்சினையால், உழைக்காமல் பணம் சம்பாதித்து வாழ்க்கையை நடத்துவது எப்படி என்று யோசித்ததாகவும், அதன் பின்னர் மருத்துவர் போல உடை அணிந்து மருத்துவமனைகள் மற்றும் மாணவியர் விடுதிகளில் திருட்டில் ஈடுபடத் தொடங்கியதாகவும் அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2016-ம் ஆண்டு முதல் இதுபோன்ற திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகவும், அவ்வப்போது போலீசாரிடம் சிக்கியதாகவும் அவர் கூறியதாக தெரிகிறது.
கர்ப்பப்பை சிகிச்சைக்காக வந்ததாக கூறியதாக தகவல்
தற்போது இரண்டாவது திருமணம் செய்து கொண்டு பெங்களூருவில் வசித்து வருவதாகவும், தனக்கு கர்ப்பப்பை தொடர்பான பிரச்சினை இருப்பதால் மருத்துவரை சந்திப்பதற்காக சென்னை வந்ததாகவும் ஸ்வேதா போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மருத்துவமனைக்கு வந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மாணவியர் விடுதியில் நகைகளை திருடியதாகவும், பின்னர் கிழக்கு தாம்பரத்தில் வசிக்கும் தனது தாயாரை சந்தித்து அவருக்கு செலவுக்காக பணம் கொடுத்துவிட்டு மீண்டும் பெங்களூரு செல்ல திட்டமிட்டிருந்ததாகவும், அதற்குள் போலீசாரிடம் சிக்கியதாகவும் அவர் தெரிவித்ததாக போலீசார் கூறியுள்ளனர்.
ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தகவல்
பிடிபட்ட ஸ்வேதா மீது சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் 5 வழக்குகளும், ஈரோடு மாவட்டம் பெருந்துறை காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவியர் விடுதியில் திருடப்பட்ட நகைகள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
