சென்னை அம்பத்தூரில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தின் 75-ஆம் ஆண்டு பவள விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அரிய கட்டுரைகள் மற்றும் வரலாற்று நிழற்படங்கள் அடங்கிய சிறப்பு மலரை ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரியும் முதுமுனைவருமான வெ. இறையன்பு வெளியிட்டுப் பேருரையாற்றினார்.
கடந்த 75 ஆண்டுகளில் 10,000-க்கும் மேற்பட்ட தமிழ் நூல்களை வெளியிட்டுள்ள இந்நிறுவனத்தின் பவள விழாவில் எழுத்தாளர்கள், புத்தக வாசிப்பாளர்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
வாசிப்புப் பழக்கத்தைத் தமிழ்நாட்டின் கிராமங்கள் முதல் பெருநகரங்கள் வரை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் முன்னோடி நிறுவனமாக நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் செயல்பட்டு வருகிறது.
தன்னலமற்ற சுதந்திரப் போராட்டத் தியாகிகளால் கடந்த 1951-ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், தமிழகத்தின் முக்கிய நகரங்களில் கிளைகளை அமைத்துச் செயல்பட்டு வருகிறது.
இதுவரை 10,000-க்கும் மேற்பட்ட அரிய தமிழ் நூல்களை வெளியிட்டு வாசகர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது. நிறுவனம் தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பவள விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தின் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் தலைமையில் நடைபெற்ற விழாவில், மேலாண்மை இயக்குநர் சந்தானம் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து நிறுவன இயக்குநரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே. சுப்பராயன் சிறப்புரையாற்றினார்.
சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட முதுமுனைவர் வெ. இறையன்பு, அரிய கட்டுரைகள் மற்றும் வரலாற்று நிழற்படங்கள் இடம்பெற்ற சிறப்பு மலரை வெளியிட்டுப் பவள விழாப் பேருரையாற்றினார். புத்தக வாசிப்பையும் தமிழ் நூல்களின் வெளியீட்டையும் தொடர்ந்து ஊக்குவித்து வரும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தின் 75 ஆண்டுகாலப் பயணத்தைக் கொண்டாடும் இவ்விழாவில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
