சென்னை வண்ணாரப்பேட்டை எம்.சி. சாலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டபோது, வியாபாரிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வடசென்னையின் முக்கிய வணிகப் பகுதிகளில் ஒன்றான வண்ணாரப்பேட்டை எம்.சி. சாலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாலையோரக் கடைகள், நடைபாதை ஆக்கிரமிப்புகள் காரணமாகப் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகப் பொதுமக்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள நிரந்தர ஜவுளிக்கடை உரிமையாளர்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், பலத்த காவல்துறை பாதுகாப்புடன் அப்பகுதியில் சாலையோரக் கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த சாலையோர வியாபாரிகள், எந்தவித முன்னறிவிப்பும் வழங்காமல், மாற்று இடமும் ஒதுக்காமல் கடைகளை அகற்றுவது தங்களது வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் எனக் கூறி மாநகராட்சி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையே, சாலையோர வியாபாரிகள் சங்கம் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீதிமன்ற உத்தரவை மீறி மாநகராட்சி நிர்வாகம் செயல்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவே நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும், சாலையோரக் கடைகளை அகற்ற உத்தரவிடவில்லை என்றும் கூறி எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் வியாபாரிகள் தங்களது வேதனையை வெளிப்படுத்தினர். அவர்கள் கூறுகையில், “நாங்கள் சாலையோரத்தில் சிறிய கடைகளை வைத்துத்தான் குடும்பத்தை நடத்தி வருகிறோம்.
விஜய் சார் வந்தால் அண்ணன், தம்பியாக இருப்பார் என்று நினைத்தோம். ஆனால், இன்று நடப்பதைப் பார்த்தால் விஜய் சார் ஏன் வந்தார் என்று நினைக்கும் அளவுக்கு நிலைமையைக் கொண்டு வந்துவிட்டார்கள்.
விஜய் சாருக்காக நாங்களும் பேசியிருக்கிறோம். ஒவ்வொரு குடும்பத்திடமும் சென்று அவருக்காக வாக்கு கேட்டோம். ஆனால், இப்போது நாங்களே பயப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எங்களுடைய வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
69 கடைகளுக்கு 39 கடைகள் மட்டுமே ஒதுக்குவதாகக் கூறுகிறார்கள். எஞ்சிய வியாபாரிகள் எங்கே செல்வது? எங்களுக்கு யாருமே துணை இல்லையா? எங்களுடைய கடைகளை நம்பி ஏராளமான மக்கள் பொருட்களை வாங்கி வருகின்றனர். அனைவருக்கும் கடை வழங்க வேண்டும். இதே பகுதியில் சாலையோரமாக எங்களுக்கென மாற்று இடம் ஒதுக்க வேண்டும்.
முதலமைச்சர் அலுவலகத்திலும், கோட்டையிலும் சுமார் 30 பேர் இணைந்து மனு அளித்தோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்றும் எங்களது கோரிக்கைக்கு தீர்வு கிடைக்கவில்லை.
மாற்று இடம் என்று சுடுகாட்டில் இடம் கொடுக்கிறார்கள். சுடுகாட்டில் பிணத்திடமா துணி விற்பனை செய்வது? இதே பகுதியில் சிறிய இடமாக இருந்தாலும் பரவாயில்லை; எங்களுக்கு மாற்று இடம் ஒதுக்குங்கள். எங்களது உழைப்பில் சம்பாதித்து வாழ்வாதாரத்தை நடத்த வழிவிடுங்கள்.
விஎஸ் பாபு உடலைத் தூக்கிச் செல்கிறார். நான் இறந்தால் என்னையும் தூக்கிச் செல்ல வேண்டியதுதானே? எங்களுடைய வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற அவர் வரமாட்டாரா? முதலமைச்சரிடமும், எம்.எல்.ஏவிடமும் கோரிக்கை வைத்துள்ளோம். இதுவரை எம்.எல்.ஏ நேரில் வரவில்லை. எங்களது பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும்” என வேதனையுடன் தெரிவித்தனர்.
மேலும், தங்களது பேட்டியைப் பார்த்தாவது முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வண்ணாரப்பேட்டை சாலையோர வியாபாரிப் பெண்களுக்கு உரிய பதில் அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
சாலையோரக் கடைகளை அகற்றும் நடவடிக்கையால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளும், மாற்று இடம் கோரி அவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
