Homeசெய்திகள்சென்னை3,000 ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு ஓய்வூதியப் பலன்கள் கிடைக்கவில்லை! சென்னையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் – அரசுக்கு கோரிக்கை

3,000 ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு ஓய்வூதியப் பலன்கள் கிடைக்கவில்லை! சென்னையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் – அரசுக்கு கோரிக்கை

-

- Advertisement -

ஓய்வூதியப் பலன்களை எவ்விதப் பிடித்தமும் இன்றி முழுமையாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஓய்வுபெற்ற பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர் நலச் சங்கத்தினர் சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை ராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், 2006-ம் ஆண்டு ஊதியக்குழுவின் அடிப்படையில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு நிலை ஊதியத்தைக் குறைத்து பிறப்பிக்கப்பட்ட அரசின் கடிதத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட 3,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு ஓய்வூதியப் பலன்களை முழுமையாக வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

சிறப்பு நிலை ஊதியத்தில் குறைப்பு: ஆசிரியர்கள் எதிர்ப்பு

ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய ஓய்வுபெற்ற ஆசிரியர் சங்க நிர்வாகி மேத்யூ, 2006-ம் ஆண்டு ஊதியக்குழு நடைமுறைப்படுத்தப்பட்டபோது ஆசிரியர்களுக்குப் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டதாகத் தெரிவித்தார்.

இதனை எதிர்த்து ஆசிரியர்கள் தொடர் போராட்டங்களை நடத்தியதைத் தொடர்ந்து, ஒரு நபர் குழு அமைக்கப்பட்டதாகவும், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அடுத்த நிலை பதவி உயர்வு இல்லாத காரணத்தால், அவர்களின் பணியனுபவத்தைக் கணக்கில் கொண்டு சிறப்பு நிலை ஊதியமாக ரூ.5,400 வழங்க அரசு அனுமதி அளித்ததாகவும் அவர் கூறினார்.

இந்தச் சிறப்பு நிலை ஊதியத்தை ஆசிரியர்கள் 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை பெற்று வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

ரூ.5,400-ல் இருந்து ரூ.4,700 ஆகக் குறைப்பு

இந்நிலையில், அரசின் துணைச் செயலாளர் ஒருவரின் கடிதத்தின் அடிப்படையில், சிறப்பு நிலை ஊதியமாக வழங்கப்பட்டு வந்த ரூ.5,400-ஐ வழங்கக் கூடாது என்றும், அதற்குப் பதிலாக ரூ.4,700 மட்டுமே வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டதாக மேத்யூ குற்றம்சாட்டினார்.

2006-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வந்த ஊதியத் தொகை, 2023-ம் ஆண்டில் தவறானது எனக் கூறி மாற்றப்பட்டிருப்பது ஓய்வுபெற்ற ஆசிரியர்களைப் பாதித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

3,000 ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் கிடைப்பதில் சிக்கல்

இந்த விவகாரத்தில் மொத்தம் 4,252 ஆசிரியர்கள் ஓய்வுபெற்ற நிலையில், சுமார் 3,000 ஆசிரியர்களிடம் ஏற்கெனவே வழங்கப்பட்ட தொகையைத் திருப்பிச் செலுத்துமாறு அரசு கூறுவதாக மேத்யூ தெரிவித்தார்.

அந்தத் தொகையைத் திருப்பிச் செலுத்தினால்தான் ஓய்வூதியப் பலன்களை வழங்க முடியும் எனக் கூறப்படுவதால், சுமார் 3,000 ஆசிரியர்கள் ஓராண்டு காலமாக ஓய்வூதியம் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.

பல ஆசிரியர்கள் பல லட்சம் ரூபாயைத் திருப்பிச் செலுத்தியுள்ளதாகவும், இதனால் தங்களைப் போன்ற ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் பணப் பலன்களை இழந்துள்ளதுடன், ஓய்வூதியத் தொகையிலும் குறைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.

நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தக் கோரிக்கை

இந்தப் பிரச்சினை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தீர்ப்பாணை பெற்று 8 மாதங்கள் ஆகியும், அந்தத் தீர்ப்பு இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என மேத்யூ தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்றும், தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டங்களைக் கைவிடப் போவதில்லை என்றும் அவர் கூறினார்.

மேலும், அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளதாகவும், நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டாலும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

தொடர் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை

ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு அரசு விரைவில் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்திய மேத்யூ, தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டால் அது அரசுக்கே அவப்பெயரை ஏற்படுத்தும் என்றார்.

எனவே, பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் ஓய்வூதியப் பலன்களை எவ்விதப் பிடித்தமும் இன்றி முழுமையாக வழங்கவும், சிறப்பு நிலை ஊதியத்தைக் குறைத்த உத்தரவைத் திரும்பப் பெறவும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தாம்பரம் மாநகராட்சியை 7 மணி நேரம் முற்றுகையிட்ட 300-க்கும் மேற்பட்ட தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் – மேயர், ஆணையாளர் உறுதியை ஏற்று போராட்டம் வாபஸ்!

MUST READ