தமிழக அரசு டாஸ்மாக் கடைகளில் அமல்படுத்தி வரும் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நெல்லை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் டாஸ்மாக் பணியாளர்கள் 2-வது நாளாகக் கடைகளை அடைத்துப் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


நெல்லை, தென்காசியில் முற்றுகைப் போராட்டம்
காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்களைக் கட்டாயப்படுத்தித் தொடர்புபடுத்தக் கூடாது என்றும், இத்திட்டத்தின் பராமரிப்புச் செலவினம் என்ற பெயரில் மேற்பார்வையாளர்களின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கும் நிர்வாகத்தின் முடிவைக் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி நெல்லை மற்றும் தென்காசி மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நெல்லை முன்னீர்பள்ளம் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர் (DM) அலுவலகத்தை ஏராளமான ஊழியர்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுகுறித்து அனைத்துத் தொழிற்சங்க நிர்வாகி சரவணபெருமாள் கூறுகையில், “டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தொழிற்சங்க நிர்வாகிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை இந்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெறும்” எனத் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சியில் 87 கடைகள் பூட்டு

இதேபோல், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, கச்சிராயபாளையம், கல்வராயன்மலை, சின்னசேலம், தியாகதுருகம் மற்றும் சங்கராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 87 டாஸ்மாக் கடைகளையும் ஊழியர்கள் 2-வது நாளாகப் பூட்டிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் மற்றும் டிஜிட்டல் பில்லிங், UPI பணப்பரிவர்த்தனை நடைமுறைகளில் உள்ள சிக்கல்களைச் சரிசெய்ய வேண்டும் என்றும் ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஊழியர்களின் பணிப் புறக்கணிப்புப் போராட்டம் காரணமாக நெல்லை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
