வங்கக்கடலில் உருவான ‘முரசு’ புயல், ஆந்திரப் பிரதேசத்தின் கடலோரப் பகுதியில் ஓங்கோல் அருகே இன்று அதிகாலை கரையை கடக்கத் தொடங்கியது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.


இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) தகவலின்படி, முரசு புயல் கரையை கடக்கும் நிகழ்வு நவம்பர் 3-ம் தேதி அதிகாலை 1 மணியளவில் தொடங்கியது. நெல்லூர் மற்றும் நரசாபூர் இடையே, ஓங்கோல் அருகே புயல் கரையை கடக்கும் என ஏற்கெனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று!
புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. அவ்வப்போது காற்றின் வேகம் மணிக்கு 120 கி.மீ. வரை அதிகரித்தது.
ஆந்திராவின் தெற்கு கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதுடன், தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயமும் நிலவுகிறது.
கடலோர மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!
முரசு புயலின் தாக்கத்தால் ஆந்திராவின் பிரகாசம், நெல்லூர், பாபட்லா உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
குறிப்பாக, ஓங்கோல் அருகே உள்ள கோத்தப்பட்டினம் கடற்கரைப் பகுதியில் கனமழையுடன் பலத்த காற்று வீசியது. விஜயவாடாவின் பல்வேறு பகுதிகளிலும் தொடர் மழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
மீட்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!
புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள ஆந்திர மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. தாழ்வான மற்றும் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மின்சாரத் தடை, சாலைப் போக்குவரத்து பாதிப்பு உள்ளிட்ட அவசரநிலைகளை எதிர்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
புயல் கரையை கடந்த பின்னரும் பலத்த காற்று மற்றும் கனமழை தொடரக்கூடும் என்பதால், பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புகளை தொடர்ந்து கவனிக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
