கோவை பெரியார் அறிவுலக நூலகத்திற்கான புத்தகக் கொள்முதலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்ந்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், நூல்களின் பதிப்பகம் மற்றும் உள்ளடக்கங்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ள அமைச்சர் ராஜ்மோகன், இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “செவ்வாய் கிரகத்திலேயே அப்படி ஒரு பதிப்பகம் இல்லை. அந்த எழுத்தாளர்களின் பெயர்களைக் கேள்விப்பட்டதே இல்லை. கீழடியில் எடுக்கப்பட்ட சிலை என்று கூகுளில் இருந்து படத்தை எடுத்துப் புத்தகத்தில் வைத்திருக்கிறார்கள். நல்லவேளையாக இதையெல்லாம் பார்க்காமல் பாரதியார் போய்விட்டார். ஒருத்தரையும் விடமாட்டோம்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
பெரியார் அறிவுலக நூலகத்திற்காக வாங்கப்பட்ட புத்தகங்களில் இடம்பெற்றுள்ள எழுத்தாளர்கள், பதிப்பகங்கள் மற்றும் படங்கள் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், அமைச்சரின் இந்தப் பேட்டி முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஏற்கனவே எழுத்தாளர் பெருமாள் முருகன் உள்ளிட்டோர் நூல் கொள்முதலில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் குற்றம்சாட்டியிருந்தனர். மேலும், நூலகத்தில் இடம்பெற்றுள்ள போலிப் புத்தகங்களை அகற்றி, கொள்முதல் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
