அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற ஆதார் அட்டைக்குப் பதிலாக வாக்காளர் அடையாள அட்டை பயன்படுத்தப்படும் என்ற மத்திய அமைச்சரின் அறிவிப்புக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். “இது வாக்கு திருட்டு மட்டுமல்ல; மக்களின் உரிமைகளைப் பறிக்கும் செயல்” என்று அவர் விமர்சித்துள்ளார்.


மத்திய அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
மத்திய பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் (லாலன் சிங்), அக்டோபர் 30-ஆம் தேதி நடைபெற்ற மக்கள் திட்டமிடல் பிரசாரத்துக்கான தேசியப் பயிலரங்கில் பேசும்போது, அமைச்சகத்தின் சில நலத்திட்டங்களுக்கான பயனாளிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவிகளைப் பெற ஆதாருக்குப் பதிலாக வாக்காளர் அடையாள அட்டை எண் மற்றும் கட்டாய பயோமெட்ரிக் அங்கீகாரம் பயன்படுத்தப்படும் என்று தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆதார் அட்டையை எளிதாகப் பெற முடிவதால், பயனாளிகளை அடையாளம் காண்பதில் சிக்கல் இருப்பதாகவும், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பயோமெட்ரிக் விவரங்கள் மூலம் பயனாளிகளை உறுதிப்படுத்த முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது.
ராகுல் காந்தி கடும் விமர்சனம்
இந்த அறிவிப்பை விமர்சித்து ராகுல் காந்தி தனது சமூக வலைதளப் பதிவில், “சதி மிகவும் ஆழமாகச் செல்கிறது. SIR என்ற பெயரில் வாக்காளர் பட்டியலிலிருந்து லட்சக்கணக்கான பெயர்கள் நீக்கப்படுகின்றன. இதைத் தடுக்காவிட்டால் மேலும் பல பெயர்கள் நீக்கப்படும்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், வாக்காளர் பட்டியலைத் தீர்மானிக்கும் அதிகாரம் நடுநிலையான தேர்தல் ஆணையத்திடம் இருக்க வேண்டும் என்றும், ஆனால் தற்போது தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நலத்திட்ட உதவிகளும் வாக்காளர் பட்டியலும் இணைக்கப்படுமா?
வாக்காளர் பட்டியலில் இருந்து ஒருவரின் பெயர் நீக்கப்பட்டால், அவருக்கு அரசு நலத்திட்ட உதவிகள் கிடைப்பதிலும் பாதிப்பு ஏற்படலாம் என்று ராகுல் காந்தி கவலை தெரிவித்துள்ளார்.
இன்று பஞ்சாயத்து ராஜ் திட்டங்கள் என்றால், நாளை ரேஷன் பொருட்கள், ஓய்வூதியம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், வீட்டு வசதி, கல்வி உதவித்தொகை மற்றும் இடஒதுக்கீடு உள்ளிட்ட திட்டங்களுக்கும் வாக்காளர் அடையாள அட்டை கட்டாயமாக்கப்படுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
“வாக்களிப்பது உங்கள் உரிமை; அது நிபந்தனை அல்ல. ஏழை ஒருவரின் ஓய்வூதியம் வாக்காளர் அட்டையுடன் கட்டுப்படுத்தப்படக் கூடாது. இது வாக்கு திருட்டு மட்டுமல்ல; உரிமை திருட்டு” என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியும் எதிர்ப்பு
முன்னதாக, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷும் மத்திய அமைச்சரின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். SIR நடவடிக்கை நடைபெற்று வரும் சூழலில், நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கு வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டால் ஏழை மக்கள் பலர் அரசு உதவிகளிலிருந்து விலக்கப்படும் அபாயம் இருப்பதாக அவர் எச்சரித்திருந்தார்.
மத்திய அமைச்சரின் அறிவிப்பு மற்றும் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் தொடர்பாக அரசின் திட்டத்தின் முழுமையான நடைமுறை விவரங்கள் வெளியாக வேண்டியுள்ளன.
ஞானேஷ் குமாரை பதவி நீக்க வலியுறுத்தி நவம்பர் 7-ல் கொச்சியில் CJP போராட்டம்!
