Homeசெய்திகள்இந்தியாஇ20 பெட்ரோல் இப்போது 420 ஆகிவிட்டது! பொதுமக்களின் வாகனங்களில் பெட்ரோல் திருடப்படுகிறது – மத்திய அரசுக்கு...

இ20 பெட்ரோல் இப்போது 420 ஆகிவிட்டது! பொதுமக்களின் வாகனங்களில் பெட்ரோல் திருடப்படுகிறது – மத்திய அரசுக்கு ராகுல் காந்தி சரமாரி கேள்வி!

-

- Advertisement -

கர்நாடக மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் பெட்ரோலில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக எத்தனால் கலக்கப்படுவதாக வெளியான ஆய்வு முடிவுகள் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரத்தில் மத்திய அரசு எப்போது நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

we-r-hiring

இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘இ20 பெட்ரோல் தற்போது 420 ஆக மாறிவிட்டது. பொதுமக்களின் வாகனங்களில் இருந்து பெட்ரோல் திருடப்படுகிறது’ எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

14 மாதிரிகளில் 11-ல் அதிக எத்தனால் கலப்பு?

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, பெட்ரோலில் 20 சதவீதம் வரை எத்தனால் கலக்கப்படுவதாகக் கூறி வருகிறது. ஆனால், கர்நாடக அரசு அந்த மாநிலத்தின் 7 மாவட்டங்களில் இருந்து பெட்ரோல் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு செய்ததாகவும், அதில் 14 மாதிரிகளில் 11 மாதிரிகளில் எத்தனால் கலப்பு 20 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளதாகவும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆய்வு முடிவுகளின்படி, சில பெட்ரோல் மாதிரிகளில் எத்தனால் கலப்பு 31.2 சதவீதம் வரை இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாகனங்களின் மைலேஜ் பாதிக்கப்படுமா?

அதிக விலை கொடுத்து பெட்ரோல் வாங்கும் வாகன ஓட்டிகளுக்கு, எதிர்பார்த்த அளவிலான பெட்ரோலுக்குப் பதிலாக அதிக அளவு எத்தனால் கலந்த எரிபொருள் கிடைப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், பெட்ரோல் நிலையங்களில் எத்தனால் கலப்பின் அளவு குறித்த விவரங்கள் தெளிவாகக் குறிப்பிடப்படுவதில்லை என்றும், இதனால் தங்களது வாகனங்களில் என்ன வகையான எரிபொருள் நிரப்பப்படுகிறது என்பதை நுகர்வோர் அறிந்துகொள்ள முடியாத நிலை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிகப்படியான எத்தனால் கலப்பு வாகனங்களின் மைலேஜைக் குறைப்பதுடன், பராமரிப்புச் செலவுகளையும் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி

இதுதொடர்பாக பிரதமர் மோடி மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ராகுல் காந்தி, பெட்ரோலில் உண்மையில் எத்தனை சதவீதம் எத்தனால் கலக்கப்படுகிறது என்றும், நிர்ணயிக்கப்பட்ட 20 சதவீத அளவைவிட அதிகமாக எத்தனால் கலந்து விற்பனை செய்யும் எண்ணெய் நிறுவனங்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், பிரதமர் மோடியுடன் பொதுவெளியில் விவாதம் நடத்துவதற்கு தான் விடுத்த சவால் இன்னும் நிலுவையில் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அந்த விவாதத்தில் எத்தனால் கலப்பு விவகாரத்தையும் சேர்த்துப் பேசலாம் என்று தெரிவித்துள்ளார்.

இ20 பெட்ரோலில் எத்தனால் கலப்பு அளவு தொடர்பாக எழுந்துள்ள இந்தப் புகார், வாகன ஓட்டிகள் மற்றும் நுகர்வோர் மத்தியில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆதாருக்குப் பதிலாக வாக்காளர் அடையாள அட்டை மூலம் நலத்திட்ட உதவிகள்? – மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு!

MUST READ