Homeசெய்திகள்ஆவடிபத்திரப்பதிவுத் துறை தனியார்மயமாக்கல்: 20 லட்சம் பேரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி – ஆவடியில் 300-க்கும் மேற்பட்ட...

பத்திரப்பதிவுத் துறை தனியார்மயமாக்கல்: 20 லட்சம் பேரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி – ஆவடியில் 300-க்கும் மேற்பட்ட பத்திர எழுத்தர்கள் போராட்டம்!

-

- Advertisement -

பத்திரப்பதிவுத் துறையைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆவடி சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு 300-க்கும் மேற்பட்ட பத்திர ஆவண எழுத்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் பத்திரப்பதிவுப் பணிகள் பாதிக்கப்பட்டன.

we-r-hiring

20 லட்சம் பேரின் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம்

தமிழகம் முழுவதும் மொத்தம் 572 பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அலுவலகங்களை நம்பி டாக்குமெண்ட் ரைட்டர்கள், வழக்கறிஞர்கள், தட்டச்சர்கள், உதவியாளர்கள் மற்றும் பத்திரம் விற்பனையாளர்கள் எனச் சுமார் 20 லட்சம் குடும்பங்கள் வாழ்வாதாரம் நடத்தி வருவதாகப் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், பத்திரப்பதிவுத் துறையைத் தனியார் வசம் ஒப்படைத்தால், இத்துறையைச் சார்ந்து பணியாற்றி வரும் லட்சக்கணக்கானோரின் வேலைவாய்ப்பும் வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்படும் என அவர்கள் கவலை தெரிவித்தனர்.பத்திரப்பதிவுத் துறை தனியார்மயமாக்கல்: 20 லட்சம் பேரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி – ஆவடியில் 300-க்கும் மேற்பட்ட பத்திர எழுத்தர்கள் போராட்டம்!

மோசடிகளுக்கு வழிவகுக்கும் புதிய நடைமுறைகள்?

இதுகுறித்து பத்திரப்பதிவு எழுத்தரும் வழக்கறிஞருமான ஜான் கூறுகையில், பத்திரப்பதிவுத் துறை தனியார்மயமாக்கப்பட்டால் ஆள் மாறாட்டம், போலிக் கையெழுத்து மற்றும் போலி ஆவணங்கள் தயாரித்தல் போன்ற முறைகேடுகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் எனத் தெரிவித்தார்.

குறிப்பாக, முத்திரைத்தாள் இல்லாமல் வெறும் வெள்ளைத்தாளில் பத்திரப்பதிவு செய்வது, வாங்குபவர் மற்றும் விற்பவரின் கையெழுத்துக்குப் பதிலாக கைரேகையை மட்டும் பயன்படுத்திப் பதிவு செய்வது போன்ற நடைமுறைகள் எதிர்காலத்தில் பெரிய அளவிலான மோசடிகளுக்கு வழிவகுக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.

கணினி கோளாறுகளால் முடங்கும் பதிவுப் பணிகள்

தற்போது நடைமுறையில் உள்ள கணினி வழிப் பத்திரப்பதிவு முறையிலும் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருவதாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

குறிப்பாக, கட்டிட மதிப்பைக் கணக்கிடுவதற்கான விவரங்களைப் பதிவிறக்கம் செய்யும்போது, நிர்ணயிக்கப்பட்ட தொகையைவிடப் பல மடங்கு அதிகமான மதிப்பு காட்டப்படுவதாகக் குற்றம்சாட்டினர்.

இதனால் பொதுமக்களால் பத்திரப்பதிவுப் பணிகளை முழுமையாக நிறைவு செய்ய முடியாத நிலை ஏற்படுவதாகவும், பதிவுப் பணிகள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.

தனியார்மயமாக்கல் திட்டத்தைக் கைவிடக் கோரிக்கை

பத்திரப்பதிவுத் துறையைத் தனியார்மயமாக்கும் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும், கணினி முறைமையில் உள்ள தொழில்நுட்பக் கோளாறுகளைச் சரிசெய்ய வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

மேலும், இத்துறையை நம்பி வாழும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கத் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

ஆவடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் தொடரும் குளறுபடி: நிரந்தரப் பதிவாளர் நியமிக்கப்படாததால் பொதுமக்கள் மற்றும் ஆவண எழுத்தர்கள் முற்றுகை போராட்டம்!

MUST READ