Homeசெய்திகள்தமிழ்நாடுதிருப்பரங்குன்றம் மலை மற்றும் முருகன் கோயிலை ASI வசம் ஒப்படைக்கக் கூடாது – இந்தியக் கம்யூனிஸ்ட்...

திருப்பரங்குன்றம் மலை மற்றும் முருகன் கோயிலை ASI வசம் ஒப்படைக்கக் கூடாது – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

-

- Advertisement -

திருப்பரங்குன்றம் மலை மற்றும் முருகன் கோயிலை இந்தியத் தொல்லியல் துறையிடம் (ASI) ஒப்படைக்கக் கூடாது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வலியுறுத்தியுள்ளது.திருப்பரங்குன்றம் மலை மற்றும் முருகன் கோயிலை ASI வசம் ஒப்படைக்கக் கூடாது – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பரங்குன்றம் மலையின் முழு உரிமையும் முருகன் கோயிலுக்கே சொந்தமானது என்றும், ஒட்டுமொத்த மலையையோ அல்லது வழிபாட்டில் உள்ள கோயிலையோ தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் மலை மற்றும் முருகன் கோயிலை இந்தியத் தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கோரி, இந்துத்துவக் கருத்தியலும் மதச்சார்பு உணர்வும் கொண்ட ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் நடைமுறையைப் பிரச்சினையாக்கி, பதற்றத்தையும் மோதல் சூழலையும் உருவாக்கும் முயற்சியின் தொடர்ச்சியாகவே இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

மேலும், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சங்கப் பரிவார் அமைப்புகளின் அழுத்தங்களுக்கு ஆளாகாமல், முந்தைய ஆட்சியிலும் தற்போதைய ஆட்சியிலும் தமிழ்நாடு அரசு உறுதியான நிலைப்பாட்டை எடுத்து செயல்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. மதச்சார்பின்மை கொள்கையில் எந்தவித சமரசமும் இன்றி, தமிழ்நாடு அரசும் இந்து சமய அறநிலையத்துறையும் இந்த விவகாரத்தை அணுகி வருவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் வழியாகப் பிரச்சினையைத் திசைதிருப்பி, நீதிமன்றம் வழங்கிய நியாயம் என்ற பெயரில் பரப்புரை செய்து அரசியல் ஆதாயம் தேட முயலும் மதவாத சக்திகளின் நடவடிக்கைகளை ஆரம்ப நிலையிலேயே முறியடிக்க வேண்டும் என்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மேலும், சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு, 1923-ஆம் ஆண்டு சிவில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும், 1931-ஆம் ஆண்டு காலனி ஆட்சிக் காலத்தில் உச்ச நீதிமன்றத்திற்கு நிகரான அதிகாரம் கொண்டிருந்த பிரிவி கவுன்சில் வழங்கிய தீர்ப்பும் திருப்பரங்குன்றம் மலையின் முழு உரிமையும் முருகன் கோயிலுக்கே சொந்தமானது என்பதை உறுதிப்படுத்துவதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசாணைகளின்படி, மலையில் அமைந்துள்ள குடைவரைக் கோயில் மற்றும் கல்வெட்டுகள் அடங்கிய சுமார் 50 சென்ட் பரப்பளவு மட்டுமே பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே ஒட்டுமொத்த மலையையோ அல்லது வழிபாட்டில் உள்ள முருகன் கோயிலையோ தொல்லியல் துறையிடம் ஒப்படைப்பது தேவையற்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, திருப்பரங்குன்றம் மலையைத் தொல்லியல் துறையின் வசம் ஒப்படைக்கக் கோரும் வழக்கு, வரும் நவம்பர் 17-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு தனது கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாக நின்று வலுவான வாதங்களை முன்வைக்க வேண்டும் என்றும், திருப்பரங்குன்றம் மலை மற்றும் முருகன் கோயிலைத் தமிழ்நாடு அரசின் பொறுப்பிலிருந்து விலக்கிச் செல்லும் முயற்சியை முறியடிக்க வேண்டும் என்றும் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டின் உரிமையையும், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலின் பாரம்பரிய உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளது.

‘தீபத்தூண் கட்டுக்கதை’: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அதிரடி பதில் மனு!

MUST READ