தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை மீரா வாசுதேவன், தனது மூன்று திருமண வாழ்க்கை குறித்த கசப்பான அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். மூன்று திருமணங்களால் தனது வாழ்க்கையின் பொன்னான 17 ஆண்டுகளை வீணடித்துவிட்டதாக அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

2003-ம் ஆண்டு இந்தியில் வெளியான ‘Rules: Pyaar Ka Superhit Formula’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் மீரா வாசுதேவன். தமிழில் ‘உன்னைச் சரணடைந்தேன்’ உள்ளிட்ட படங்களிலும், மலையாளத்தில் ‘தன்மாத்ரா’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.
17 ஆண்டுகளை இழந்துவிட்டேன்!
சமீபத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மீரா வாசுதேவன், தனது திருமண வாழ்க்கை குறித்து மனம் திறந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “எனது மூன்று முட்டாள்தனமான திருமணங்களால் வாழ்க்கையின் 17 ஆண்டுகளை வீணடித்துவிட்டேன் என்று அடிக்கடி என் மகனிடம் கூறுவேன். அந்த ஆண்டுகளை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தியிருந்தால் சினிமா, உடற்பயிற்சி மற்றும் நல்ல நட்பு வட்டத்தை உருவாக்குவது என பல விஷயங்களில் சாதித்திருக்க முடியும்.
எனது அப்பா, அம்மா மற்றும் தங்கையுடன் அதிக நேரத்தைச் செலவிட்டிருக்கலாம். ஆனால் என்னை மதிக்காத, என்னைப் பொருட்படுத்தாத நபர்களுக்காக எனது பொன்னான நேரத்தை வீணடித்துவிட்டேன்” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
மூன்று திருமணங்களும் விவாகரத்தில் முடிந்தன!
மீரா வாசுதேவனின் முதல் திருமணம் கடந்த 2005-ம் ஆண்டு ஒளிப்பதிவாளர் அசோக் குமாரின் மகன் விஷால் அகர்வாலுடன் நடைபெற்றது. இந்தத் திருமணம் 2010-ம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது.
இதைத்தொடர்ந்து 2012-ம் ஆண்டு மலையாள நடிகர் ஜான் கொக்கனை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்தத் திருமணமும் 2016-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.
பின்னர் 2024-ம் ஆண்டு மே மாதம் ஒளிப்பதிவாளர் விபின் புதியங்கத்தை மூன்றாவதாகத் திருமணம் செய்தார். ஆனால் இந்தத் திருமணமும் நீண்ட காலம் நீடிக்காமல் 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடிவுக்கு வந்தது.
மகனுக்காக எடுத்த முடிவு தவறானது!
தனது மூன்றாவது திருமணம் காதலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்றும், தனது மகன் மீது அந்த நபர் காட்டிய அன்பும் அக்கறையும் காரணமாகவே அந்தத் திருமணத்திற்குச் சம்மதித்ததாகவும் மீரா தெரிவித்துள்ளார்.
தனது மகனுக்கு ஒரு நல்ல தந்தை கிடைப்பார் என்று நம்பியதாகவும், ஆனால் அந்தக் கணிப்பு தவறாகிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உடல் ரீதியான மற்றும் மன ரீதியான துன்புறுத்தல், துரோகம், ஏமாற்றுதல் போன்றவற்றை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
இனி மகனுக்காக வாழ்வேன்!
மூன்று திருமணங்கள் தோல்வியடைந்த பெண் என்று சமூகம் தன்னை முத்திரை குத்துவதைப் பற்றிக் கவலைப்படவில்லை எனக் கூறியுள்ள மீரா, தனது தவறுகளை ஒப்புக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
இனி யாரையும் சார்ந்து வாழாமல், தனது மகனுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக வாழ வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அவர் உருக்கமாகக் கூறியுள்ளார்.
சாய் பல்லவி மாதிரி ஒரு சீதையை பார்க்க முடியாது …. விமர்சனங்களுக்கு தனுஷ் கொடுத்த பதிலடி!
