தமிழகத்தில் காவல் மரணங்கள் நடைபெறக் கூடாது என்பதே காவல்துறையின் எண்ணம் என்றும், தூத்துக்குடி மற்றும் மதுரை காவல் நிலையங்களில் அண்மையில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் இருப்பதாகவும் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தூத்துக்குடி மற்றும் மதுரையில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பான வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு, விசாரணை தொடங்கியுள்ளதாகக் கூறினார். விசாரணையில் தவறுகள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை நிச்சயமாக எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், காவல் நிலையங்களுக்கு வருபவர்கள் அனைவரின் நடமாட்டமும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.
காவல்துறையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்
தமிழக காவல்துறையில் 1,200 உதவி ஆய்வாளர் பணியிடங்களும், 34,000 காவலர் பணியிடங்களும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட உள்ளதாக டிஜிபி தெரிவித்தார்.
காவல்துறையினருக்கு வார விடுப்பு வழங்க வேண்டுமெனில் அதற்குத் தேவையான காவலர்கள் பணியில் இருக்க வேண்டும் என்றும், முக்கியமான பாதுகாப்புப் பணிகள் இல்லாத நாட்களில் வார விடுப்பு வழங்க முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் கூறினார்.
காவல்துறையில் காலிப்பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்பட்ட பின்னர் வார விடுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தில் கொலைச் சம்பவங்கள் குறைந்துள்ளன
கடந்த ஐந்து ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டில் தமிழகத்தில் கொலைச் சம்பவங்கள் குறைவாகவே நடைபெற்றுள்ளதாக டிஜிபி கூறினார். ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல்களால் நிகழ்ந்த கொலைகள் ஒரு சதவீதம் மட்டுமே என்றும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தேசிய மகளிர் ஆணையம் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்காமல் புறப்பட்ட டிஜிபி
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணை கோரியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இந்தக் கேள்வி எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பை நிறைவு செய்த டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
