Homeசெய்திகள்க்ரைம்ஏடிஎம் மையத்தில் டீலரின் கவனத்தைத் திசைதிருப்பி ரூ.86,100 கொள்ளை – பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் தப்பிய...

ஏடிஎம் மையத்தில் டீலரின் கவனத்தைத் திசைதிருப்பி ரூ.86,100 கொள்ளை – பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் தப்பிய இரண்டு மர்ம நபர்கள்!

-

- Advertisement -

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் அருகே பட்டப்பகலில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்த டீலரின் கவனத்தைத் திசைதிருப்பி, ரூ.86,100 ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற இரண்டு மர்ம நபர்களை செம்பனார்கோவில் போலீசார் தேடி வருகின்றனர்.ஏடிஎம் மையத்தில் டீலரின் கவனத்தைத் திசைதிருப்பி ரூ.86,100 கொள்ளை – பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் தப்பிய இரண்டு மர்ம நபர்கள்!

பரசலூர் ஊராட்சிக்கு உட்பட்ட மகாராஜபுரம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர், அப்பகுதியில் தனியார் நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஃபிண்டி / டாடா இண்டிகேஷ் ஏடிஎம் மையத்தை நடத்தி வருகிறார். ஏடிஎம் மையத்தின் ஒரு பகுதியில் கண்ணாடிக் கதவு அமைத்து பெட்டிக்கடையும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், வழக்கம்போல் இன்று மதியம் சுமார் 12.30 மணியளவில் செம்பனார்கோவிலில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக்குச் சென்று, ஏடிஎம் இயந்திரத்தில் நிரப்புவதற்காகப் பணத்தை எடுத்துக்கொண்டு வந்துள்ளார். பின்னர் ஏடிஎம் மையத்திற்குள் பணத்தை நிரப்பும் பணியில் முருகன் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், குடிப்பதற்குத் தண்ணீர் பாட்டில் கேட்டுள்ளார். இதனை நம்பி முருகன் தண்ணீர் பாட்டில் எடுப்பதற்காக உள்ளே சென்றுள்ளார். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர், அங்கிருந்த ரூ.86,100 ரொக்கப் பணம் அடங்கிய பையை எடுத்துக்கொண்டு வெளியே ஓடியுள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த முருகன் சத்தமிட்டபடி அந்த நபரைப் பிடிக்கப் பின்னால் ஓடியுள்ளார். ஆனால், ஏடிஎம் மையத்திற்கு வெளியே யுனிகார்ன் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தபடி மற்றொரு நபர் தயாராகக் காத்திருந்துள்ளார். தொப்பி அணிந்திருந்த கொள்ளையன், அந்த நபருடன் இருசக்கர வாகனத்தில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுள்ளார்.

பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடைபெற்ற இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து செம்பனார்கோவில் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஏடிஎம் மையம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தப்பியோடிய இரண்டு மர்ம நபர்களையும் அடையாளம் கண்டு கைது செய்ய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வத்தலக்குண்டு அருகே ஆடு திருடும் கும்பல் அட்டகாசம் – 3 ஆடுகளைத் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியீடு!

MUST READ