விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஆலம்பூண்டி பகுதியில் கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி அதிகாலை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி காணாமல் போன வழக்கில், இன்றுடன் 41 நாட்கள் ஆகியும் சிறுமி குறித்த எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. இதையடுத்து, சிபிசிஐடி போலீசார் 31-வது நாளாக பல்வேறு கோணங்களில் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று ஆலம்பூண்டி பகுதியில் முகாமிட்டுள்ள சிபிசிஐடி போலீசார், சிறுமியின் எதிர்வீட்டில் வசிக்கும் மஞ்சுளா, அவரது மருமகள் மகேஸ்வரி மற்றும் அதே பகுதியில் வசிக்கும் அய்யப்பன் என்பவரது மனைவி பவானி ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர். சிறுமி பயின்ற பள்ளியில் வைத்து, சிபிசிஐடி டிஎஸ்பி கீதா தலைமையிலான போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
அதேபோல், சரித்திரப் பதிவேடு குற்றவாளி எனக் குறிப்பிடப்படும் ராஜதுரை என்பவரை ரகசிய இடத்தில் வைத்து, சிபிசிஐடி டிஎஸ்பி வேல்முருகன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் அவர்களது உறவினர்கள் என மொத்தம் 8 பேரின் செல்போன்களை கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிபிசிஐடி போலீசார் பெற்றுச் சென்றனர். அந்த செல்போன்கள் மற்றும் தொடர்புடைய வங்கி ஆவணங்களைத் தொடர்ந்து 10-வது நாளாக ஆய்வு செய்து வருகின்றனர்.
சிறுமி காணாமல் போன சம்பவம் தொடர்பாக 41 நாட்களாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இதுவரை எந்தத் தடயமும் கிடைக்காததால், சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமான வழக்கு: 10 பேரிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை!
