கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில், தரைமட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த பெட்ரோல் சேமிப்புத் தொட்டியின் இரும்பு மூடி அழுத்தம் காரணமாக திடீரெனப் பறந்து தாக்கியதில், அங்கு ஆட்டோவுக்கு எரிவாயு நிரப்பக் காத்திருந்த ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக பெட்ரோல் பங்கில் பணியாற்றிய மூன்று பேரைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சங்கனூர் பிரிவு பகுதியில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விற்பனை செய்யும் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது.
இந்தப் பங்கில் புதிதாக பெட்ரோல் சேமித்து வைப்பதற்காக தரைமட்டத்தில் தொட்டி அமைக்கப்பட்டு, அதில் குழாய் இணைப்புகளும் பொருத்தப்பட்டு வந்தன. தொட்டியின் இருபுறங்களிலும் குழாய் இணைப்புகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றில் இரும்பினால் ஆன மூடிகள் பொருத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில், நேற்று மாலை சுமார் 3 மணியளவில் தரைமட்டத் தொட்டியில் குழாய் இணைக்கும் பணிகள் நடைபெற்றன. இதற்காக ஒரு பக்கத்தில் இருந்த இரும்பு மூடி திறக்கப்பட்டு குழாய் இணைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுபோன்ற பணிகள் நடைபெறும்போது பாதுகாப்பு கருதி பெட்ரோல் பங்கை மூடி வைக்க வேண்டும் என்ற நிலையில், பங்க் மூடப்படாமலேயே பணிகள் நடைபெற்றதாகத் தெரிகிறது. அப்போது பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு நிரப்புவதற்காக ஏராளமான வாகனங்கள் அங்கு காத்திருந்தன.
அந்த நேரத்தில் கோவை பீளமேடு ராமசாமி லேஅவுட் பகுதியைச் சேர்ந்த கன்னிமுத்து என்ற ஆட்டோ ஓட்டுநர், தனது ஆட்டோவுக்கு சி.என்.ஜி. எரிவாயு நிரப்புவதற்காக அங்கு வந்திருந்தார். ஆட்டோவை நிறுத்திவிட்டு அதன் அருகே அவர் காத்திருந்தார்.
அப்போது தரைமட்டத் தொட்டியில் குழாய் இணைக்கும் பணியின்போது திடீரென அழுத்தம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் தொட்டியின் மறுபுறத்தில் இருந்த இரும்பு மூடி பலத்த சத்தத்துடன் கழன்று பறந்து வந்து, ஆட்டோ அருகே நின்றிருந்த கன்னிமுத்துவை வேகமாகத் தாக்கியது. இதில் உடலில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைப் பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கவுண்டம்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். உயிரிழந்த கன்னிமுத்துவின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், பெட்ரோல் பங்கில் பணியாற்றிய மூன்று பேரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொட்டியின் மூடி சுமார் இரண்டு மாதங்களாக மூடப்பட்டிருந்ததால், அதற்குள் அதிகளவில் காற்று தேங்கியிருந்திருக்கலாம் என்றும், ஒரு பக்க மூடியைத் திறந்து குழாய் பொருத்தும் பணியில் ஈடுபட்டபோது ஏற்பட்ட அழுத்தம் காரணமாக மறுபுறத்தில் இருந்த மூடி கழன்று பறந்திருக்கலாம் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பெட்ரோல் பங்கை மூடாமல் பணிகள் மேற்கொள்ளப்பட்டதா, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தனவா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
