HomeBreaking Newsகாவிரி விவகாரத்தில் - எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்

காவிரி விவகாரத்தில் – எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்

-

- Advertisement -

காவிரி விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம் – முதலமைச்சர் விஜய்க்கு சரமாரி கேள்வி!காவிரி விவகாரத்தில் - எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த இரண்டு இடையீட்டு மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாகக் கூறி, தமிழக முதலமைச்சர் விஜய்க்கு எதிராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழக அரசின் இரண்டு இடையீட்டு மனுக்களையும் உச்சநீதிமன்றம் ஒரே வார்த்தையான “Dismissed” எனக் கூறி தள்ளுபடி செய்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் முதலமைச்சருக்கே தெரியாது என்றும் விமர்சித்துள்ள அவர், காவிரி பிரச்சினையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவில்லை, காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை, சட்டப் போராட்டத்தையும் முறையாக முன்னெடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தின் உரிமைகளுக்கு எதிராகப் பேசுவதாகக் கூறப்படும் கர்நாடக முதலமைச்சரைக் கண்டிக்காமல், அவருடன் டெல்லியில் புகைப்படம் எடுத்துக்கொள்வதாகவும் சாடியுள்ளார்.

ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையைத் திறக்க முடியாததால் குறுவை சாகுபடி ஏற்கெனவே பாதிக்கப்பட்டதாகவும், கர்நாடக அரசு காவிரி நீரை முழுமையாக வழங்காததால் தற்போது சம்பா சாகுபடியும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

டெல்லிக்குச் சென்றபோது தமிழக விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு முதலமைச்சருக்கு நேரமில்லையா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதற்காக 22 நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்கிப் போராடி தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டியதாகக் குறிப்பிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் தனது தலைமையிலான ஆட்சிக் காலங்களில் போராடிப் பெற்ற காவிரி உரிமையை தற்போதைய அரசு பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தின் ஜீவாதார உரிமையையும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் அரசு அலட்சியப்படுத்துவதாகக் குற்றம்சாட்டிய அவர், “நீர் இன்றி நெல் இல்லை. நெல் இன்றி குடி இல்லை. குடி இல்லையேல் கோன் எதற்கு?” எனத் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 

MUST READ