இரண்டு வானம் படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.
விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் ராம்குமார் கூட்டணியில் வெளியான ‘ராட்சசன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், இன்று வரையிலும் தமிழ் சினிமாவின் கிரைம் த்ரில்லர் படங்களில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள புதிய திரைப்படத்திற்கு ‘இரண்டு வானம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். இது ஒரு டைம் டிராவல் கதைக்களமாக இருக்கலாம் எனச் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. இந்த தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும் கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்து, தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் கடந்த அக்டோபர் மாதமே இப்படத்தை வெளியிடப் படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில், ‘இரண்டு வானம்’ படத்தின் செகண்ட் சிங்கிளான “ஆத்தி என்னால முடியலையே” பாடல் இன்று (நவம்பர் 23) மாலை 5:00 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதே சமயம் இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
