HomeBreaking Newsதிருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் செயல்பாடே மதச்சார்பின்மைக்கு முன்மாதிரி! – அமைச்சர் வன்னியரசு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் செயல்பாடே மதச்சார்பின்மைக்கு முன்மாதிரி! – அமைச்சர் வன்னியரசு

-

- Advertisement -

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் செயல்பாடு மதச்சார்பின்மையை நிலைநிறுத்துவதற்கான முன்மாதிரியாக இருப்பதாக அமைச்சர் வன்னியரசு தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் வன்முறை, பதற்றம் மற்றும் மதக்கலவரத்தைத் தூண்டும் முயற்சியில் பாஜக ஈடுபடுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

கவிஞர் சுரதா பிறந்தநாள்: அமைச்சர்கள் மரியாதை

சென்னை அசோக்பில்லரில் உவமைக் கவிஞர் சுரதாவின் 106-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் அவரது திருவுருவப்படத்திற்கு அமைச்சர்கள் ராஜ்மோகன், வெங்கட்ரமணன், வன்னியரசு மற்றும் அரசு உயர் அதிகாரிகள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் வன்னியரசு, அன்னைத் தமிழில்தான் கோவில்களில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்ற முழக்கத்தைத் தொடர்ந்து முன்னெடுத்தவர் கவிஞர் சுரதா என்று பெருமிதம் தெரிவித்தார்.

கூட்டணிக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று மாலை நடைபெறவுள்ள கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். மேலும், கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும் கூறினார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நடவடிக்கை மதச்சார்பின்மையை நிலைநிறுத்திப் பாதுகாக்கக்கூடியது என்று கூறிய அமைச்சர் வன்னியரசு, மதச்சார்பற்ற அரசுதான் தமிழ்நாட்டில் நடைபெறுகிறது என்பதற்கு இந்த விவகாரத்தில் அரசின் செயல்பாடே முன்மாதிரி என்றும் தெரிவித்தார்.

திருப்பரங்குன்றம் கோவிலில் இந்துக்களின் மரபுப்படி காலம் காலமாக எந்த இடத்தில் தீபம் ஏற்றப்பட்டு வந்ததோ, அதே இடத்தில்தான் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு என்றும் அவர் குறிப்பிட்டார்.

மக்களின் குரல்தான் அரசின் குரல் என்று தெரிவித்த அவர், வழக்கமாக தீபம் ஏற்றப்படும் தீபத்தூணில் தீபம் ஏற்றாமல் நில அளவைக் கல்லில் ஏற்றச் சொல்வது என்ன மாதிரியான முரண்பாடு என்றும் கேள்வி எழுப்பினார்.

பாஜகவுக்கு அமைச்சர் வன்னியரசு கேள்வி

சபரிமலை ஐயப்பன் கோவில் தொடர்பான தீர்ப்பை பாஜக ஏற்றுக்கொண்டதா அல்லது மதித்ததா என்று கேள்வி எழுப்பிய அமைச்சர், பாஜகவுக்குத் தேவையானவற்றை மட்டுமே அக்கட்சி பேசுவதாக விமர்சித்தார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கடந்த அரசு எடுத்த அதே நிலைப்பாட்டைத்தான் தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசும் எடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதனை நூறு ஆண்டுகள் பின்னோக்கிச் செல்வதாக எப்படிக் கூற முடியும் என்றும் கேள்வி எழுப்பினார். எதிர்க்கட்சிகள் காழ்ப்புணர்ச்சியுடன் அவதூறு பரப்புவதாகவும் குற்றம்சாட்டினார்.

பாஜக, ஆர்.எஸ்.எஸ். மீது குற்றச்சாட்டு

திருப்பரங்குன்றம் விவகாரத்தை முன்வைத்து பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் வன்முறை, பதற்றம் மற்றும் மதக்கலவரத்தைத் தூண்டும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அமைச்சர் வன்னியரசு குற்றம்சாட்டினார்.

மதுரையில் அமைதிப் பேரணி: திருமாவளவன் பங்கேற்பு

மதுரையில் இன்று மாலை நடைபெறவுள்ள அமைதிப் பேரணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்து கொள்வார் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இந்தப் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது தொடர்பாக கட்சித் தலைவர் திருமாவளவன் பேசுவார் என்றும் வன்னியரசு கூறினார்.

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சிகளிடையே கருத்து வேறுபாடுகள் நீடித்து வரும் நிலையில், அமைச்சர் வன்னியரசுவின் இந்தக் கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளன.

40 ஆண்டுகளாக வீட்டுமனைப் பட்டா கேட்டு போராடிய மக்களுக்கு தீர்வு! – அமைச்சர் வன்னி அரசு தகவல்

MUST READ