Homeசெய்திகள்தமிழ்நாடுதிருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் முதல்வர் பகல் வேஷம் போடுகிறார் – கரூரில் பாஜக மாநிலத் தலைவர்...

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் முதல்வர் பகல் வேஷம் போடுகிறார் – கரூரில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்!

-

- Advertisement -

திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்றாமல் முதலமைச்சர் செயல்படுவதாகவும், கோவிலுக்குச் செல்வது பகல் வேஷம் போடுவது போன்றது என்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் முதல்வர் பகல் வேஷம் போடுகிறார் – கரூரில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்!

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் விடுதியில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சிறப்பு விருந்தினர்களாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மாநிலத் துணைத் தலைவர் இராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன் கூறியதாவது:

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற வேண்டும் என்பது அனைத்து மக்களின் கோரிக்கையாக உள்ளது. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் தீபம் ஏற்றினால்கூட எங்களுக்குப் போதுமானது. ஆனால், இந்த விவகாரத்தில் முதலமைச்சருக்குப் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது தீபத்தூண் இல்லை என்று நீதிமன்றத்தில் வாதிடுகின்றனர்.

1923-ஆம் ஆண்டு முதல் இந்த விவகாரம் தொடர்பான வழக்கு நடைபெற்று வருவதாகவும், 1996-ஆம் ஆண்டு தீபம் ஏற்றலாம் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். 2026-ஆம் ஆண்டிலும் அதே தீர்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், உச்ச நீதிமன்றமும் அதனை உறுதி செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அதனை ஏற்க மறுப்பது ஏன்? தீபம் ஏற்றுவதில் என்ன பிரச்சினை? முதலமைச்சர் கோவிலுக்குச் செல்வது பகல் வேஷம் போடுவது போன்றதா? என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும், ஆபாச குறுஞ்செய்தி விவகாரத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு என்ன பதில் அளிக்கப்படுகிறது என்றும் கேள்வி எழுப்பினார்.

நாளை திருக்கார்த்திகை திருநாளை முன்னிட்டு சொக்கப்பனை கொளுத்துவது, தீபம் ஏற்றுவது போன்ற ஐதீகங்கள் கடைப்பிடிக்கப்பட உள்ளன. இந்த ஆண்டு தீபம் ஏற்றிவிட்டு, அடுத்த ஆண்டு குறித்துப் பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று கூறியும் முதலமைச்சர் மறுப்பதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார்.

தனக்கு அனைத்து மதங்களும் சம்மதம் என்று குறிப்பிட்ட அவர், நீதிமன்றத் தீர்ப்பை முதலமைச்சரால் ஏன் நிறைவேற்ற முடியவில்லை என்றும், அதில் என்ன சிரமம் இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பினார். இந்த விவகாரத்தில் முதலமைச்சரின் நிலைப்பாட்டை வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.

திருப்பரங்குன்றத்தில் நாளை கார்த்திகை தீபத் திருவிழா: 700-க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு – உச்சகட்ட பாதுகாப்பு!

 

MUST READ