தமிழ் சினிமாவில் முக்கியமான இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத்தை அறிமுகப்படுத்தியது நடிகர் தனுஷ் தான். தனுஷ் நடித்த ‘3’ படத்தில் இடம்பெற்ற ‘ஒய் திஸ் கொலவெறி’ என்ற பாட்டு பயங்கரமாக ஹிட் ஆகி, பட்டிதொட்டி எங்கும் ட்ரெண்ட் ஆனது.
அதற்குப் பிறகுதான் அனிருத்திற்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்ததுடன், தொடர்ந்து தனுஷின் படங்களிலும் அனிருத் இசையமைத்து வந்தார். இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற இசையமைப்பாளர் அனிருத்தின் திருமணத்திற்கு நடிகர் தனுஷை அவர் நேரில் அழைக்காதது குறித்துப் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், இதற்கான காரணங்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிவுக்கு பிந்தைய குடும்பச் சூழல் இதற்கு ஒரு முக்கியக் காரணமாக இருக்கலாம் என பிஸ்மி குறிப்பிட்டுள்ளார். ஐஸ்வர்யா, அனிருத்தின் உறவினர் என்பதால், தனுஷுடன் அனிருத் நெருக்கமான நட்பைத் தொடர்வது குடும்பத்திற்குள் ஒரு சங்கடமான சூழலை உருவாக்கியிருக்கலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், இவர்களின் பிரிவுக்கு முன்பே தனுஷ் மற்றும் அனிருத் இடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். திருமணத்திற்கு தனுஷ் வருகிறாரோ இல்லையோ, தன்னைத் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய நடிகரை அனிருத் நேரில் சென்று அழைத்திருக்க வேண்டும் என்றும், அப்படி அழைக்காதது ஏமாற்றமளிப்பதாகவும் பிஸ்மி கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், ‘3’ திரைப்படத்தின் 15-வது ஆண்டு நிறைவை ஒட்டி அனிருத் வெளியிட்ட நன்றிப் பதிவில் தனுஷைப் பற்றிக் குறிப்பிடாதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். உலக அளவில் வைரலான ‘ஒய் திஸ் கொலவெறி டி’ பாடலின் மெட்டை உருவாக்கியதில் தனுஷின் பங்களிப்பும், அனிருத்திற்கு இசையமைப்பாளராக முதல் வாய்ப்பை வழங்கியதும் திரையுலகில் அனைவரும் அறிந்ததே என அவர் நினைவுகூர்ந்துள்ளார்.
தனுஷை அழைக்க வேண்டாம் என ரஜினிகாந்த் அனிருத்திடம் கூறியதாக பரவும் யூகங்களை பிஸ்மி மறுத்துள்ளார். இது போன்ற தனிப்பட்ட விஷயங்களில் ரஜினிகாந்த் தலையிட மாட்டார் என்றும், இந்த சர்ச்சையால் அவர் வருத்தமடைந்திருக்கவே வாய்ப்புள்ளதாகவும் பிஸ்மி தெரிவித்துள்ளார். தனுஷ் – ஐஸ்வர்யாவின் பிரிவுக்குப் பிறகும் தனுஷ் மற்றும் ரஜினிகாந்த் இடையே சுமூகமான உறவே நீடித்ததாகவும், ஞாயிற்றுக்கிழமை மதிய உணவுக்காக தனுஷ், ரஜினி இல்லத்திற்கு செல்வது, தனுஷின் பிறந்தநாளுக்கு ரஜினி முதலில் வாழ்த்து சொல்வது, அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு இருவரும் ஒன்றாக பயணித்தது ஆகியவற்றையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். சமீபகாலமாக இவர்களின் தொடர்பு குறைந்திருந்தாலும், திருமண அழைப்பிதழ் விவகாரத்தில் ரஜினிக்கு எந்தத் தொடர்பும் இல்லை என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சிம்புவின் ‘பீப் பாடல்’ சர்ச்சையின் போது அதற்கு அனிருத்தான் இசையமைத்ததாக பரவலாகப் பேசப்பட்டது. அப்போது பத்திரிகையாளர் ஒருவர் இது குறித்து தனுஷிடம் கேள்வி எழுப்பியபோது, “அது அனிருத் இசையமைத்த மெட்டு அல்ல. அவர் போட்ட அனைத்து மெட்டுகளும் எனக்குத் தெரியும். அனிருத் நான் தூக்கி வளர்த்த குழந்தை போன்றவர். அவர் அப்படிப்பட்ட காரியத்தை ஒருபோதும் செய்ய மாட்டார்” என தனுஷ் அனிருத்திற்கு ஆதரவாகப் பேசியதையும் பிஸ்மி நினைவுகூர்ந்து, இக்கட்டான நேரத்தில் அனிருத்திற்கு தனுஷ் கொடுத்த ஆதரவை சுட்டிக்காட்டியுள்ளார்.
