Homeசெய்திகள்சென்னைமரணத்திலும் வாழும் மனிதாபிமானம்: மூளைச்சாவு அடைந்த கூலித் தொழிலாளியின் கண்கள், தோல்கள் தானம்!

மரணத்திலும் வாழும் மனிதாபிமானம்: மூளைச்சாவு அடைந்த கூலித் தொழிலாளியின் கண்கள், தோல்கள் தானம்!

-

- Advertisement -

குடும்பத் தலைவரை இழந்த துயரத்திலும் மனைவி, பிள்ளைகள் உன்னத முடிவு – நோயாளிகளுக்கு மறுவாழ்வு அளித்த ராஜ்குமார் குடும்பத்தினர்மரணத்திலும் வாழும் மனிதாபிமானம்: மூளைச்சாவு அடைந்த கூலித் தொழிலாளியின் கண்கள், தோல்கள் தானம்!

சென்னை புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மூளைச்சாவு அடைந்த நிலையில், அவரது குடும்பத்தினர் எடுத்த மனிதாபிமானம் மிக்க முடிவால் அவரது கண்கள் மற்றும் தோல்கள் தானமாகப் பெறப்பட்டு, சிகிச்சைக்காகக் காத்திருந்த நோயாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

குடும்பத் தலைவரை இழந்த துயரத்திலும், மற்றவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் அவரது குடும்பத்தினர் உடல் தானத்திற்கு முன்வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புது வண்ணாரப்பேட்டை, மங்கம்மாள் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (52). கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த இவருக்கு சுமித்ரா என்ற மனைவியும், ஒரு மகளும், இரண்டு மகன்களும் உள்ளனர். மகளுக்குத் திருமணமாகிவிட்ட நிலையில், இரண்டு மகன்களும் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த 19-ஆம் தேதி ராஜ்குமாருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, உடனடியாக அவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி ராஜ்குமார் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதனால் அவரது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

தங்கள் குடும்பத் தலைவரை இழந்த துயரத்திலும், அவரது உடல் உறுப்புகள் மற்றும் திசுக்கள் மூலம் மற்றவர்களின் வாழ்வில் மறுவாழ்வு ஏற்படுத்த முடியும் என்பதை உணர்ந்த மனைவி சுமித்ரா மற்றும் பிள்ளைகள், அவரது கண்கள் மற்றும் தோல்களைத் தானமாக வழங்க முன்வந்தனர்.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று ஆணையத்தின் (TRANSTAN) வழிகாட்டுதலின்படி, ஸ்டான்லி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் குழுவினர் அறுவை சிகிச்சை மூலம் ராஜ்குமாரின் கண்கள் மற்றும் தோல்களைத் தானமாகப் பெற்றனர்.

தானமாகப் பெறப்பட்ட கண்கள் மற்றும் தோல்கள், சிகிச்சைக்காகக் காத்திருந்த நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்பட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தில் எளிய நிலையில் இருந்தபோதிலும், குடும்பத் தலைவரின் இழப்பால் ஏற்பட்ட துயரத்தையும் கடந்து, மற்றவர்களின் நலனுக்காக உடல் தானம் செய்ய முன்வந்த ராஜ்குமாரின் குடும்பத்தினரின் செயல் பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

மருத்துவமனை நிர்வாகம் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சார்பிலும் குடும்பத்தினருக்கு நெகிழ்ச்சியுடன் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

பில்லி சூனியம் செய்வதாகக் கூறி குடும்பத்தையே மிரட்டி ரூ.56 லட்சம் பறிப்பு: அகில பாரத இந்து மகா சபா பொதுச் செயலாளர் கைது!

MUST READ