காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் – தாம்பரம் மாநில நெடுஞ்சாலையில், கொல்லாபுரி அம்மன் கோவில் அருகே குடிநீர் தொட்டிக்கான மின்சார சுவிட்ச் பாக்ஸில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
மின்மாற்றிக்கு (டிரான்ஸ்பார்மர்) மிக அருகில் அமைக்கப்பட்டிருந்த இந்த சுவிட்ச் பாக்ஸில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகத் தீப்பிடித்து மளமளவெனப் பரவியது.
சுவிட்ச் பாக்ஸ் அருகிலேயே மின்மாற்றியும் குடிநீர் தொட்டியும் இருந்ததால், தீ மேலும் பரவி பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உருவானது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாகச் செயல்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அவர்களின் துரிதமான நடவடிக்கையால் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. பொதுமக்களின் சமயோசித செயலால் பெரும் உயிர் மற்றும் பொருட்சேதம் தவிர்க்கப்பட்டது.
இதற்கிடையே, தீ விபத்து குறித்து மின்வாரியத்திற்குத் தகவல் தெரிவித்தும், நீண்ட நேரமாக அதிகாரிகளோ ஊழியர்களோ சம்பவ இடத்திற்கு வரவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மின்மாற்றிக்கு அருகிலேயே மின்சார சுவிட்ச் பாக்ஸ் அமைக்கப்பட்டிருந்த நிலையில், தீ விபத்து ஏற்பட்டபோது மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக வராதது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
