தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) ஆர்எஸ்எஸ் பின்னணியில் இருந்து இயக்குவதாகவும், அக்கட்சியின் தலைவர் விஜய் வெறும் முகமூடியாக இருப்பதாகவும் திராவிடர் கழகப் பிரச்சார செயலர் அருள்மொழி குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை சைதை தேரடி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய அவர், திராவிட இயக்கத்தின் சாதனைகள், தற்போதைய அரசியல் சூழல், பெண்கள் பாதுகாப்பு, சட்டம் – ஒழுங்கு மற்றும் இந்தித் திணிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்துத் தனது கருத்துகளைத் தெரிவித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
பிறந்தநாள் விழாக்கள் வெறும் புகழுரைகளுடன் முடிந்துவிடுவது திராவிட இயக்கத்தின் வரலாறு அல்ல. சகோதரர் மாசு, சைதை பகுதியில் மேற்கொண்டு வரும் மக்கள் நலப் பணிகள் பாராட்டுக்குரியவை.
மலைவாழ் மக்களின் நலனுக்காக ‘குறிஞ்சி நலம்’ என்ற மருத்துவத் திட்டத்தைத் தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்வதே முக்கியம்.
கடந்த 50 ஆண்டுகளில் திராவிட இயக்க ஆட்சிகள் கல்வி மற்றும் மருத்துவத் துறைகளில் பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளன.
இருப்பினும், இளைஞர்கள் மற்றும் குழந்தைகளின் சிந்தனைகளில் சமூக வலைதளங்கள் வழியாக ஏற்படுத்தப்படும் தாக்கங்களைக் கவனிக்கத் தவறிவிட்டோம். தற்போது மக்கள் தங்களின் தவறுகளையும் சூழல்களையும் உணர்ந்து மீண்டும் உரையாடத் தொடங்கியுள்ளனர்.
சமூகத்தில் சனாதனக் கருத்துகள் பிரிவினையையும் மூடநம்பிக்கைகளையும் உருவாக்குகின்றன. சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று துணிச்சலுடன் பேசியவர் உதயநிதி ஸ்டாலின்.
எதிர்ப்புகளுக்கு அஞ்சாமல் தனது கொள்கையில் உறுதியாக இருப்பதுடன், இளைஞரணிச் செயலாளராகக் கொள்கைப் பயிற்சிப் பாசறைகள் மூலம் ஏராளமான இளம் பேச்சாளர்களையும் உருவாக்கியுள்ளார்.
பெண்கள் பாதுகாப்பு குறித்து கேள்வி :
பெண் அதிகாரி ஒருவருக்கு சட்டமன்ற உறுப்பினர் தவறான தகவல் அனுப்பியதாக எழுந்துள்ள விவகாரத்தில், பாதிக்கப்பட்டவருக்குத் துணை நிற்பதற்குப் பதிலாகக் குற்றச்சாட்டு தெரிவித்த அதிகாரியையே விமர்சிப்பது சரியல்ல.
திமுகவில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழும்போது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், தற்போதைய சூழலில் சட்டம் – ஒழுங்கு மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
தவெக மீது ஆர்எஸ்எஸ் தொடர்பு குற்றச்சாட்டு:
தமிழக வெற்றிக் கழகம் ஆர்எஸ்எஸ் பின்னணியில் இருந்து இயக்கப்படுவதாகத் தெரிகிறது. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் இருந்த நிர்மல் குமார், தற்போது தவெகவின் முக்கிய முகமாக உள்ளார். கட்சியின் தலைவர் விஜய் வெறும் முகமூடியாக மட்டுமே இருக்கிறார் என்று அருள்மொழி விமர்சித்தார்.
இந்தித் திணிப்பால் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கும்:
தமிழக அரசு அலுவலகங்கள், இணையதளங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் இந்தி திணிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், பள்ளிகளுக்கான கல்வி நிதி வராத நிலையும் மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்றார்.
போட்டித் தேர்வுகளில் இந்தி ஆதிக்கம் செலுத்தினால் தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் கடுமையாகப் பாதிக்கப்படும். தமிழகத்தின் மொழி உரிமைகள், கல்வி உரிமைகள் மற்றும் மாநில உரிமைகளைப் பாதுகாக்கக் கொள்கை உறுதியுள்ள இயக்கங்களும் தலைவர்களும் அவசியம். அந்த வகையில், உதயநிதி ஸ்டாலின் இந்தக் கொள்கைகளை மேலும் தீவிரமாக மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.
இவ்வாறு அருள்மொழி பேசினார்.
