வண்டலூர் அருகே மண்ணிவாக்கம் சிக்னலில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி மீது தனியார் பள்ளிப் பேருந்து மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து தொடர்பாகப் பேருந்து ஓட்டுநரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அடுத்த வெங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (58). ராணுவத்தில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர், படப்பை அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் பாதுகாப்பு அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். இவருக்கு கௌரி என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல் வேலைக்குச் செல்வதற்காக சந்திரசேகர் தனது இருசக்கர வாகனத்தில் வண்டலூர்–வாலாஜாபாத் சாலையில் சென்று கொண்டிருந்தார். காலை சுமார் 10 மணியளவில் மண்ணிவாக்கம் சிக்னல் அருகே சென்றபோது, திடீரென மாடு ஒன்று சாலையின் குறுக்கே வந்துள்ளது. இதனால் எதிர்பாராத விதமாக அந்த மாட்டின் மீது சந்திரசேகர் சென்ற இருசக்கர வாகனம் மோதியது. இதில் நிலைதடுமாறி அவர் சாலையில் கீழே விழுந்தார்.
அப்போது பின்னால் அதிவேகமாக வந்த தனியார் பள்ளிப் பேருந்து, கீழே விழுந்து கிடந்த சந்திரசேகர் மீது ஏறி இறங்கியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரியில் உள்ள தாம்பரம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சந்திரசேகரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தாம்பரம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாகப் பள்ளிப் பேருந்தை ஓட்டி வந்த வண்டலூர் அடுத்த வெங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த குமரேசன் (39) என்பவரைப் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தால் மண்ணிவாக்கம் சிக்னல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், கடுமையான போக்குவரத்து நெரிசலும் நிலவியது.
சரித்திரப் பதிவேடு ரவுடி தலைமையில் மாமூல் கேட்டு மிரட்டல்? கொடுங்கையூரில் மூவர் கைது!
