சென்னை அல்லிக்குளம் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் மோதல் – பெண் மனுதாரர், இரு வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டதாகப் புகார்; வீடியோ அடிப்படையில் போலீசார் விசாரணை!
சென்னை அல்லிக்குளம் நீதிமன்ற வளாகத்தில் வழக்கு விசாரணைக்காக வந்த பெண் மனுதாரர் மற்றும் அவருடன் வந்த இரு வழக்கறிஞர்களை, மற்றொரு வழக்கறிஞரும் அவரது மகனும் தாக்கியதாகப் புகார் எழுந்துள்ளது. இந்த மோதல் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெரியமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜோஸ்பின் (54) என்பவருக்குச் சொந்தமான சுமார் 800 சதுர அடி நிலம், கடந்த 2021-ஆம் ஆண்டு அவருக்குத் தெரியாமல் அவரது தங்கை மூலம் ராஜுராம் மார்வாடி என்பவருக்கு விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தனது நிலத்தை மீட்டுத் தரக் கோரி ஜோஸ்பின் கடந்த 2021-ஆம் ஆண்டு வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கை நடத்துவதற்காக உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சூரியபிரகாஷிடம் பணம் கொடுத்து வழக்கை நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், வழக்கறிஞர் சூரியபிரகாஷ் எதிர்தரப்பினருடன் இணைந்து செயல்பட்டு, அவர்களுக்குச் சாதகமாக வழக்கை முடித்துவிட்டதாக ஜோஸ்பின் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக சூரியபிரகாஷ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நீதிமன்றத்திலும் மனு அளித்துள்ளார்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான மேல் விசாரணைக்காக இன்று மதியம் 1 மணியளவில் ஜோஸ்பின் அல்லிக்குளம் நீதிமன்ற வளாகத்திற்கு வந்துள்ளார். அப்போது அவருடன் வந்த உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களான சுஜித் சுந்தர், கோபிநாத் ஆகியோருக்கும், வழக்கறிஞர் சூரியபிரகாஷ் மற்றும் அவரது மகன் டி.எஸ். பிரசன்னா ஆகியோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
அப்போது, தன் மீது புகார் அளிப்பாயா எனக் கேட்டு ஆபாச வார்த்தைகளால் திட்டியதுடன், சூரியபிரகாஷும் அவரது மகனும் தன்னையும், தன்னுடன் வந்த இரு வழக்கறிஞர்களையும் தாக்கியதாக ஜோஸ்பின் புகார் அளித்துள்ளார்.
இந்த மோதல் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, வீடியோ காட்சிகளின் அடிப்படையிலும், புகாரின் அடிப்படையிலும் பெரியமேடு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் – தமிழக அரசுக்கு ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை!
