Homeசெய்திகள்சென்னைகிண்டியில் தனியார் ஐடி நிறுவன அலுவலகம் சூறை! ₹2 கோடி சர்வர், 90 லேப்டாப்கள் மாயம்...

கிண்டியில் தனியார் ஐடி நிறுவன அலுவலகம் சூறை! ₹2 கோடி சர்வர், 90 லேப்டாப்கள் மாயம் – ₹17 கோடி நஷ்டம் என புகார்; 3 பேர் கைது!

-

- Advertisement -

சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் தனியார் மென்பொருள் நிறுவனத்தின் அலுவலகத்தில் புகுந்து சுமார் ₹2 கோடி மதிப்பிலான சர்வர், 90-க்கும் மேற்பட்ட லேப்டாப்கள் மற்றும் ரொக்கப் பணம் உள்ளிட்டவை எடுத்துச் செல்லப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக கிண்டி போலீசார் மூன்று பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

18 ஆண்டுகளாகச் செயல்படும் ஐடி நிறுவனம்:

சிகாகோவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனத்தின் ஒரு பகுதியாக உள்ள ‘என்வீ சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்’ (Ennvee Solutions Private Limited) நிறுவனம், சென்னையில் சுமார் 18 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. கிண்டி கோச்சார் குளோப் பகுதியில் உள்ள ஸ்மார்ட்ஒர்க்ஸ் (Smartworks) கோ-வொர்க்கிங் அலுவலகத்தில் இந்நிறுவனம் இயங்கி வருகிறது.

சுமார் 220 பணியிடங்களுக்கான ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில், ஊழியர்கள் பெரும்பாலும் வீட்டிலிருந்தே பணிபுரிவதால் 120 பணியிடங்களை உள் குத்தகைக்கு விடுவது அல்லது நிர்வாகத்துடன் சுமுகமான உடன்பாட்டுக்கு வருவது தொடர்பாக நிறுவனம் முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.

உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் அலுவலகத்தில் பரபரப்பு:

இந்தச் சூழலில், கடந்த நவம்பர் 18-ஆம் தேதி எவ்வித முன்னறிவிப்புமின்றி அலுவலகம் பூட்டப்பட்டதாக என்வீ சொல்யூஷன்ஸ் நிறுவனம் புகார் தெரிவித்துள்ளது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இதில், நவம்பர் 23-ஆம் தேதி அலுவலகத்தைப் பயன்படுத்த அனுமதிக்கும் வகையில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அன்று இரவு 7 மணியளவில் ஊழியர்கள் அலுவலகத்திற்குச் சென்றபோது, அங்கிருந்த பொருட்கள் மாயமாகியிருந்ததாகவும், அலுவலகம் சூறையாடப்பட்டிருந்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

₹2 கோடி சர்வர், 90 லேப்டாப்கள் மாயம்:

அலுவலகத்தில் இருந்த முக்கிய வாடிக்கையாளர்களின் தரவுகள் அடங்கிய சுமார் ₹2 கோடி மதிப்பிலான சர்வர், 90-க்கும் மேற்பட்ட லேப்டாப்கள், ஊழியர்களுக்குச் சொந்தமான ₹4 லட்சம் ரொக்கம் மற்றும் நிறுவனத்தின் அவசரத் தேவைக்காக வைக்கப்பட்டிருந்த ₹5 லட்சம் ஆகியவை காணாமல் போனதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், முக்கிய ரகசிய ஆவணங்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும், சர்வர் இணைப்புகளுக்கான வயர்கள் துண்டிக்கப்பட்டதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தால் வாடிக்கையாளர்களின் தரவுகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், வணிக ஒப்பந்தங்களை இழக்கும் நிலை உருவாகியுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. சுமார் 120 ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், மொத்தமாக ₹17 கோடி வரை வணிக இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வாடகை பாக்கி தொடர்பாக இரு தரப்பிலும் மாறுபட்ட கருத்து:

இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து போலீசாரிடம் விசாரித்தபோது, தனியார் மென்பொருள் நிறுவனத்தினர் மாதம் ₹19 லட்சம் வாடகை செலுத்தி வந்ததாகவும், பராமரிப்பு குறைபாடு காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக வாடகை செலுத்தவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மூன்று ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் அமலில் இருப்பதாகவும், ₹90 லட்சம் முன்பணமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. வாடகை தொடர்பாக இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அதில் ஏற்பட்ட உடன்பாட்டை மீறி சர்வர் வயர்கள் துண்டிக்கப்பட்டு, லேப்டாப்கள் உள்ளிட்ட விலை உயர்ந்த மின்னணுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

நிறுவன நிர்வாகம் விளக்கம்:

இதுகுறித்து என்வீ சொல்யூஷன்ஸ் நிறுவனத்தினர் கூறுகையில், அலுவலகத்தில் ஏசி மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் முறையாகப் பராமரிக்கப்படாததால் இரண்டு மாதங்களாக வாடகையை நிறுத்தி வைத்திருந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

மேலும், தங்களுடைய ₹90 லட்சம் முன்பணத் தொகை ஸ்மார்ட்ஒர்க்ஸ் நிறுவனத்திடம் இருப்பதாகவும், தங்களை அந்த இடத்திலிருந்து வெளியேற்றிவிட்டு வேறொரு நிறுவனத்துக்கு கூடுதல் வாடகைக்கு விடுவதற்காகவே இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

3 பேர் கைது செய்து போலீசார் விசாரணை:

இந்தப் புகாரின் அடிப்படையில் கிண்டி காவல் நிலையத்தில் FIR எண் 0494/2026-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக பாலசுப்பிரமணியன், அன்பரசன் உள்ளிட்ட மூன்று பேரைக் கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக என்வீ சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் சென்னை இயக்குநர் கே.வி. ராஜேந்திரன் மற்றும் நிறுவனத் தலைவர் வீரா வேணுகோபால் ஆகியோரிடமும் விளக்கம் பெறப்பட்டுள்ளது.

சென்னை மாதவரத்தில் ரூ.140 கோடி மதிப்பிலான 72.24 கிலோ ஹெராயின் பறிமுதல் – ஐஸ்கிரீம் வாகனத்தில் கடத்த முயன்ற இருவர் கைது!

MUST READ