HomeBreaking Newsவரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்தூணில் மகா தீபம்...

வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்தூணில் மகா தீபம் ஏற்றப்பட்டது; 600 மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் குவிப்பு

-

- Advertisement -

நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள பழமையான தீபத்தூணில் இன்று (நவ. 28) மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது. இதன் மூலம் இன்றைய நாள் திருப்பரங்குன்றம் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக மாறியுள்ளது.

 

வழக்கின் பின்னணி:
திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றக் கோரி, மதுரை ஏழுமலையைச் சேர்ந்த இந்து மக்கள் சேனா அமைப்பின் ராம ரவிக்குமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதில் தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 20-ஆம் தேதி தீபம் ஏற்ற இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
எனினும், மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் அறநிலையத்துறையினர் அங்கு தீபம் ஏற்றாமல், மலை மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவிலில் மட்டுமே தீபம் ஏற்றினர். இதையடுத்து கடந்த 25-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், தீபம் ஏற்றும் பணிகளைக் கண்காணிக்கத் தனிக்குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டனர்.

13 பேர் கொண்ட உயர்மட்டக் குழு:
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஓய்வு பெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் பார்த்திபன் ஆகியோர் தலைமையில் 13 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் தலைமைச் செயலர் வீரராகவ ராவ், மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன், கோவில் ஸ்தானிகப் பட்டர்கள், வருவாய் அலுவலர்கள் மற்றும் மத்திய துணை ராணுவ அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள்:
இக்குழுவினரின் மேற்பார்வையில், தீபத்தூணைச் சுற்றிலும் 4 அடி உயரத்தில் 8×8 அடி சதுர வடிவிலான பிரத்யேக மேடை அமைக்கப்பட்டது. தீபம் ஏற்றுவதற்காகத் திருவண்ணாமலையில் இருந்து 6 பேர் கொண்ட பிரத்யேக தீபக் குழுவினர் வரவழைக்கப்பட்டிருந்தனர். 30 கிலோ நெய், 50 மீட்டர் காடா துணி, 5 கிலோ கற்பூரம் மற்றும் மண் கலயங்கள் மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டு ஏற்பாடுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

தீப தரிசனமும் பக்தர்கள் கொண்டாட்டமும்:
மாலை 5 மணியளவில், ஓய்வு பெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் மற்றும் உயர்மட்டக் குழுவினர் முன்னிலையில் தீபத்தூணில் மகா தீபம் ஏற்றப்பட்டது. பாதுகாப்புக் காரணங்களுக்காக மலை உச்சியில் 50 நபர்களுக்கு மட்டுமே தீப தரிசனம் காண அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

அதேசமயம், மலைப்பாதை நுழைவு வாயில் மற்றும் கிரிவலப் பாதையில் திரண்டிருந்த இந்து அமைப்பினரும் பொதுமக்களும், முருகன் பாடல்களைப் பஜனையாகப் பாடியும், கைதட்டி விசில் அடித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தீபம் ஏற்றப்பட்ட தருணத்தில் பக்தர்களின் ‘அரோகரா’ முழக்கம் விண்ணைப் பிளந்தது.

பலத்த பாதுகாப்பு:
அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில், மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) ஐ.ஜி விக்ரம் தலைமையில் 600-க்கும் மேற்பட்ட துணை ராணுவ வீரர்கள் மலைப்பாதை மற்றும் கோவில் வளாகம் முழுவதும் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

திருப்பரங்குன்றம் மலை உச்சிக்குச் செல்லப் பொதுமக்களுக்குத் தடை: காவல்துறை தடுப்புகள் அமைத்து நடவடிக்கை

MUST READ