சிவகாசி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டதை அடுத்து அறைகள் தரைமட்டமாகின.
சிவகாசி அருகே அனுப்பன்குளம் கிராமத்தில் ஆறுமுக சாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. தொழிற்சாலையின் 80-க்கும் மேற்பட்ட அறைகளில் சுமார் 300 ஆண்- பெண் தொழிலாளர்கள் பல்வேறு பட்டாசு ரகங்களை உற்பத்தி செய்யும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு அறையில் பட்டாசு தயாரிக்க தேவையான முக்கிய மூலப்பொருள் அலுமினிய பவுடரை சல்லடை மூலமாக அலசும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அந்த அறையில் வேலை பார்த்த தொழிலாளர்கள் அனைவரும் வெளியேறி மற்றுமுள்ள அறைகளுக்கு சென்ற நிலையில், திடீரென மூலப் பொருளில் உராய்வு காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. விபத்தில் அந்த அறை முழுவதும் இடிந்து தரைமட்டமானது. வெடி விபத்து சத்தம் கேட்டவுடன் அருகில் இருந்த அறைகளில் பட்டாசு உற்பத்தி செய்து கொண்டிருந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்களும் அந்தந்த அறைகளிலிருந்து வெளியேறி தொழிற்சாலை வளாகத்தை விட்டு உயிர் பிழைக்க தப்பி ஓடினர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு, காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவம் நடந்த தொழிற்சாலைக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். விபத்து குறித்து சிவகாசி கிழக்கு பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.