கரூர் அடுத்த வேலுச்சாமிபுரம் பகுதியில் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் சிவராஜ் இருசக்கர வாகனத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த போது மர்ம நபர் சிலரால் காரில் கடத்தப்பட்டார்.

அதிமுக நிர்வாகி சிவராஜ் கடத்தப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கரூர் – கோவை நெடுஞ்சாலை முனியப்பன் கோவில் பகுதியில் அரசு பேருந்துகளை முற்றுகையிட்டு, அதிமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கடத்தப்பட்ட அதிமுக நிர்வாகி சிவராஜ் ஒரு மணி நேரத்தில் மர்ம நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டு சுக்காலியூர் காட்டுப்பகுதியில் போலீசார் மற்றும் அதிமுகவினரால் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளார்.

இதற்கிடையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்புக்கு உள்ளானது. அதனை தொடர்ந்து அதிமுகவினர் கடத்திய நபர்கள் மீது வழக்கு பதிய வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். மேலும், கடத்திய நபர்கள் மீது வழக்கு பதியவில்லை என்றால், மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அறிவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக கரூர் – கோவை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
