பாட்னா கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் முன்வைத்த தேர்தல் யோசனைகள்
பாஜகவை வீழ்த்துவதை அனைத்து தலைவர்களும் ஒற்றை இலக்காக கொண்டிருக்கிறார்கள் என எதிர்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்று சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்தார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு இயக்கங்களின் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட பின் பீகாரில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்த தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பாட்னாவில் எதிர்கட்சிகள் கூட்டத்தை நடத்தினார். இந்தியாவின் ஜனநாயகத்தை, மக்களாட்சியை, பன்முகத்தன்மையை, மதச்சார்பின்மையை, ஏழை, எளிய ஒடுக்கப்பட்ட மக்களை காப்பாற்ற வேண்டுமானால் பாஜக மீண்டும ஆட்சிக்கு வரக்கூடாது என பீகாரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினோம்.

மதச்சார்பற்ற கட்சிகளின் ஒற்றுமை தான் தமிழ்நாட்டில் அனைத்து வெற்றிக்கும் காரணமாக அமைந்தது. அதேபோல அகில இந்திய அளவிலும் இந்த ஒற்றுமை தான் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி கூறினேன். எந்த மாநிலத்தில் எந்த கட்சி செல்வாக்குடன் இருக்கிறதோ அந்த கட்சி தலைமையில் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம். கூட்டணியாக அமைக்க முடியவில்லை என்று சொன்னால் தொகுதி பங்கீடுகள் மட்டும் செய்து கொள்ளலாம், அதுவும் முடியவில்லை என்றால் பொது வேட்பாளர் அறிவித்துக் கொள்ளலாம் என தெரிவித்தேன். தேர்தலுக்குப் பிறகு கூட்டணி என்பது சரியான நிலைபாடாக இருக்காது. அரசியல் கட்சிகளுக்கு இடையே குறைந்தபட்சம் செயல்திட்டம் ஒதுக்கப்பட வேண்டும் என்று கூட்டத்தில் கூறினேன்.
பாஜகவை வீழ்த்துவதை அனைத்து தலைவர்களும் ஒற்றை இலக்காக கொண்டிருக்கிறார்கள். பாஜகவை வீழ்த்த அனைத்து கட்சிகளும் ஒன்று பட வேண்டும் என்று நினைத்தோம். அந்த ஒற்றுமை பாட்னாவில் ஏற்பட்டிருக்கிறது. ஒற்றுமையே வெற்றிக்கு அடிப்படை. நிச்சயமாக அகில இந்திய அளவில் பாஜக தோற்கடிக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. கூட்டத்திற்கு பின் பாட்னாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்காததில் எவ்வித உள்நோக்கமும் இல்லை. விமானத்திற்கு நேரமானதால் அனைத்து தலைவர்களிடமும் கூறிவிட்டுதான் பாட்னாவிலிருந்து புறப்பட்டேன். பிரதமர் வேட்பாளர் யார் என்பது முடிவு செய்யவில்லை” என்றார்.


