செந்தில் பாலாஜி நீக்கம் ஏன்? ஆளுநர் விளக்கம்
அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜி நீக்கம் குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. நேற்று (ஜூன் 29) இரவு உத்தரவிட்டிருந்தார். அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வேலை வாங்கித் தருவதாக மோசடி மற்றும் பணமோசடி உள்பட பல கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி விசாரணையில் குறுக்கிட்டு சட்ட நடவடிக்கைகளைத் தடுப்பதால் அமைச்சரவையிலிருந்து நீக்குவதாக ஆளுநர் குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சரை நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது, சட்ட ரீதியாக சந்திப்போம் எனக் கூறியிருந்தார்.


இந்நிலையில் அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜி நீக்கம் குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார். 5 பக்கங்கள் கொண்ட கடிதத்தில், செந்தில் பாலாஜி நீக்கத்திற்கான காரணம் குறித்து விளக்கம் அளித்திருந்தார். அதில், செந்தில்பாலாஜி மீது ஊழல், சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பான வழக்குகள் உள்ளன, செந்தில்பாலாஜி வழக்கில் அமைச்சர் பதவி கவசமாக அமைந்துள்ளதாக உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் “ஜூன் 15 ஆம் தேதி செந்தில்பாலாஜியின் இலாகா மாற்ற கோரியபோது, உடல்நிலை மட்டுமே காரணமாக சொல்லப்பட்டது. அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது குறித்து முதல்வர் குறிப்பிடவில்லை. ஜூன் 16 ஆம் தேதி அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தேன். இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வது செந்தில்பாலாஜிக்கு கூடுதல் பலம்”என கடிதத்தில் ஆளுநர் குறிப்பிட்டிருந்தார். இதனிடையே அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பால் தனது முடிவில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி பின்வாங்கியதாக தகவல்கள் வெளியானது.


