தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாகப்பட்டினத்தில் இருந்து 480 கிலோமீட்டர் தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் எந்த நகர்வும் இன்றி அதே இடத்தில் மையம் கொண்டுள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 48 மணி நேரத்தில் இலங்கை வழியாக குமரிக்கடல் பகுதியை நோக்கி நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், நாகை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் டிசம்பர் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. டிசம்பர் 26 ஆம் தேதி குமரி, நெல்லை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, காரைக்கால், தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, தென்காசி, விருதுநகர், சிவகங்கையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 25 வரை வங்கக்கடலின் தென்மேற்கு பகுதி, இலங்கை கரை குமரிக்கடல் மன்னார் வளைகுடாவில் சூறாவளி வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
