சிவகார்த்திகேயன் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். வரும் ஜூலை 14 அன்று வெளியாகவுள்ளது. எனவே இந்தப் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக சிவகார்த்திகேயன் ஹைதராபாத், கொச்சி உள்ளிட்ட இடங்களுக்கு பயணம் செய்து வருகிறார்.
இந்தப் படத்தை அடுத்து கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார். ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இந்தப் படத்தை இயக்குகிறார். சாய்பல்லவி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் பகுதிகளில் நடைபெற்று வந்தது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் தனது தோற்றம் வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக தலையில் தொப்பி போட்டுக் கொண்டே தான் வலம் வந்துகொண்டிருக்கிறார்.
இந்நிலையில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடிப்பதாகக் கூறப்படுகிறது.
10 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய இராணுவத்தில் மேஜராக இருந்து ஜம்மு காஷ்மீரில் நடந்த ஒரு தாக்குதலில் துணிச்சலாகச் செயல்பட்டு இந்தியா முழுக்க புகழ் பெற்ற ஒரு இளம் ராணுவ வீரரின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது. இந்தப் படம் சிவகார்த்திகேயனின் கேரியரில் முக்கிய படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
ராணுவ வீரருக்கான தோற்றம் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகத் தான் தலையை மறைத்து சுற்றிவருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


