- Advertisement -

சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகரைச் சேர்ந்தவர் மணி (வயது 27). இவரும், இவரது அண்ணன் தினேஷும் சேர்ந்து வள்ளுவர் கோட்டம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள பிளாட்பாரத்தில் காய்கறி மற்றும் பழங்களை வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களது கடையில் புஷ்பா நகரைச் சேர்ந்த வீராசாமி என்பவர் வேலை செய்து வருகிறார்.
கடந்த இரண்டு மாதங்களாக மாலை நேரங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் போது கள்ள நோட்டுகளைக் கொடுத்து சிலர் காய்கறிகள் வாங்கிச் சென்றுள்ளனர். இந்த நிலையில், கோயம்பேடு மொத்த சந்தையில் தினேஷ், மணி இருவரும் காய்கறிகள், பழங்கள் வாங்க சென்றபோது பலமுறை இவர்கள் கொடுக்கும் பணத்தில் கள்ள நோட்டுகள் இருந்துள்ளன.
வாடிக்கையாளர்களிடம் பணம் வாங்கும்போது ஒரு முறைக்கு இருமுறை நல்ல நோட்டு தானா? என்பதை கவனித்து வாங்குங்கள் என கோயம்பேடு மொத்த வியாபாரிகள் அவர்களுக்கு அறிவுரைக் கூறியுள்ளனர். இந்த நிலையில், நேற்று (ஆகஸ்ட் 17) இரவு வழக்கம்போல் வியாபாரம் பரபரப்பாக நடந்துக் கொண்டிருந்தது. அப்போது, இவர்களது கடைக்கு வந்த முதியவர் 670 ரூபாய்க்கு காய்கறி ,பழங்களை வாங்கிவிட்டு, மூன்று புதிய 500 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்துள்ளார். 670 ரூபாய் போக மீதி தொகையும், ஒரு 500 ரூபாய் நோட்டுக்கு சில்லறையும் தினேஷ் கொடுத்துள்ளார்.

மேலும், ரூபாய் நோட்டுகளைப் பார்த்து சந்தேகமடைந்த கடையின் ஊழியர் வீராசாமி உடனடியாக, கடை உரிமையாளர் தினேஷிடம் முதியவர் கொடுத்த ரூபாய் நோட்டுகளைக் காண்பித்தார். அப்போது அவை கள்ள நோட்டுகள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, உடனடியாக தினேஷ் நுங்கம்பாக்கம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் முதியவரை அதிரடியாக கைது செய்தனர். வழக்குப்பதிவுச் செய்து அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பள்ளிக்கரணையைச் சேர்ந்த அண்ணாமலை (வயது 64) என்பதும், முன்னாள் ராணுவ வீரர் என்பதும் தெரிய வந்தது. அவர் கொடுத்த தகவலின் பெயரில் விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றும் சுப்பிரமணியன் (வயது 62) என்பவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதையடுத்து சுப்ரமணியனின் வீட்டில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அதில். ஒரு கட்டிங் மெஷின், ஒரு கவுண்டிங் மெஷின், 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் இருந்தது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து, அவற்றை முழுவதுமாக காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இவர்களுக்கு ரூபாய் நோட்டுகளை அச்சடித்து கொடுத்த குமார் என்பவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் நுங்கம்பாக்கத்தில் உள்ள பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


