திரைத்துறையில் தானே அடி எடுத்து வைத்து தன்னைத்தானே செதுக்கிக் கொண்டு ஸ்டார் நடிகராக உருவெடுத்தவர்கள் பலர். மறுபுறம், தங்கள் குடும்பத்தின் செல்வாக்கை பயன்படுத்தி நுழைந்து கடின உழைப்பைப் போட்டு மக்கள் மனதில் நிலைத்து நிற்பவர்கள் பலர். இதில் இன்று நம் பிறந்தநாள் நாயகன் ஜெயம் ரவி இரண்டாம் ரகம்.
பிரபல எடிட்டர் மோகனின் மகன்களான மோகன் ராஜா மற்றும் ரவி இருவரும் அப்பாவின் செல்வாக்கின் மூலம் சினிமாவில் நுழைகின்றனர்.

மோகன் ராஜா தெலுங்கில் ஒரே ஒரு படத்தை மட்டும் இயக்கி இருந்தார். அதை எடுத்து தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன ஜெயம் படத்தை தமிழிலும் இயக்கினார்.
இந்தப் படத்தில் தன் தம்பியை கதாநாயகனாக அறிமுகம் செய்து வைக்கிறார். ரவியும் பக்கத்து வீட்டு பையன் போல அப்பாவியாக நடித்து காதலுக்காக எந்த எல்லைக்கும் செல்லும் துடிப்புமிக்க இளைஞனாக நடித்து சதாவின் மனதை மட்டுமல்ல ரசிகர்களின் மனதையும் வென்றார். ஜெயம் படத்தின் அசுர வெற்றியால் சாதாரண ரவி ஜெயம் ரவியாக மாறினார். முதல் படமே அவருக்கு ஜெயமாக அமைந்துவிட்டது.
அதையடுத்து மற்ற மொழிகளில் ஹிட்டான படங்களை மோகன் ராஜா தனது தம்பியை கதாநாயனாக நடிக்க வைத்து வரிசையாக படங்களை இயக்கினார். அந்த படங்களும் ஜெயம் ரவிக்கு ஓரளவுக்கு கை கொடுத்தன.
அந்தப் படங்கள் ஜெயம் ரவிக்கு ஃபேமிலி ஆடியன்ஸை அதிகமாக்கியது. ஜெயம் ரவி படம் என்றால் நம்பி போகலாம் என்று குடும்ப ரசிகர்கள் நம்பும் வண்ணம் உருவெடுத்தார்.
என்ன தான் தன் குடும்பத்தின் செல்வாக்கும் மூலம் சினிமாவில் நுழைந்து இருந்தாலும் திறமை இல்லாவிட்டால் இங்கு நீடித்திருக்க முடியாது. ஜெயம் ரவி தன்னுடைய கடின உழைப்பால் தற்போது வரை சினிமாவில் நீடித்திருக்கிறார் என்றால் அது மிகையாகாது.
ஒவ்வொரு படத்திலும் அவர் தன்னைத்தானே மெருகேற்றிக் கொண்டு வந்துள்ளார். தீபாவளி படத்தில் ‘சுஜி சுஜி’ என்று அவர் பேசும் காட்சிகள் தற்போதும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம்.
சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் தன் அப்பாவை பிடிக்காத மகனாக, புதுமையை விரும்பும் கதாநாயகனாக அருமையாக நடித்திருந்தார். பணக்கார வீட்டு பையன் தோற்றத்தில் சாக்லேட் பாய் கதாபாத்திரத்தில் மட்டும் தான் ரவி நடிப்பார் போல என்று எண்ணியதை பேராண்மை படத்தில் அடித்து நொறுக்கினார்.
கம்யூனிச சித்தாந்தம் பேசும் பழங்கடியினராகவும் முதலாளித்துவ மனோபாவம் கொண்ட மாணவர்களுக்கு மத்தியில் உண்மைக்காக போராடும் ஆசிரியராகவும் அதே சமயம் நாட்டுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு எதிராக போராடும் போர் வீரனாகவும் நடித்து அசத்தியிருந்தார். அந்த படத்தில் நாம் ஜெயம் ரவியை கண்டு மெச்சினோம். அதன் பிறகு தில்லாலங்கடி, எங்கேயும் காதல், ஆதி பகவன், நிமிர்ந்து நில் என புதுப்புது கதைக்களங்களில் களமிறங்கினார்.
இதற்கிடையில் ரீமேக் படங்களாக எடுத்து குவித்து வைத்திருக்கிறார் மோகன் ராஜா அவருக்கு சொந்தமாக கதை எழுதத் தெரியாது என்று தொடர்ந்து வந்த விமர்சனங்களை தனி ஒருவன் படத்தின் மூலம் உடைத்து எறிந்தார்.
மீண்டும் தன் தம்பியை கதாநாயகனாக களம் இறக்கிறார். ஆனால் இந்த முறை தன் சொந்தக் கதையில். ரீமேக் படம் மட்டுமே படம் எடுத்தவர், சொந்தக் கதை எப்படி எழுதியிருக்கிறார் என்று காத்திருந்தவர்களுக்கு தரமான பதில் கொடுத்தார்.
தனி ஒருவன் படத்தை பற்றி நாம் தனியாக சொல்ல வேண்டியதில்லை. இன்றளவும் தமிழ் சினிமாவில் சிறந்த வில்லன் யார் என்றால் சித்தார்த் அபிமன்யு தான் பலர் கூறுவார்கள். தற்போது இரண்டாம் பாகம் உருவாகிறது என்பது ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகம் தான்.
பூலோகம் படத்தில் உடற்கட்டை மெருகேற்றி பாக்ஸிங் வீரராக மிரட்டல் காட்டினார். மிருதன் படத்தில் ஜோம்பிகளுக்கு எதிராக போராடும் கதாநாயகனாக கலக்கினார். அதையடுத்து போகன், வனமகன் டிக் டிக் டிக் உள்ளிட்ட எக்ஸ்ப்ரிமெண்டல் கதைக்களங்களை கையில் எடுத்தார். அதில் சில கை கொடுத்தன, சில தடுக்கி விட்டனர்.
பின்னர் அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதனிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்தார். அவரும் ஜெயம் ரவிக்கு கோமாளி என்ற பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்தார்.
இறுதியாக தமிழ் சினிமாவின் பல கதாநாயக பல ஸ்டார் நடிகர்கள் இந்த கதாபாத்திரத்தில் தன் வாழ்நாளில் எப்படியாவது நடித்து விட வேண்டும் என்று கனவு கண்ட ‘பொன்னியின் செல்வன்’ கதாபாத்திரம் கடைசியாக ஜெயம் ரவிக்கு தான் கிடைத்தது.
பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி படத்தில் வாழ்ந்திருந்தார். அந்த கதாபாத்திரம் அவருக்கு கதகச்சிதமாக பொருந்தி இருந்தது என்று சொல்லலாம்.
சில ஹீரோக்கள் வந்த சில வருடங்களிலேயே சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்து ஸ்டார் நடிகர்களாக உருவெடுத்த போது, தான் பொறுமையாக நடித்தாலும் மக்களுக்கு பிடித்தவாறு நல்ல கதைகள் மட்டுமே நடிப்பேன் என்று மெல்ல மெல்ல முன்னேறி வருகிறார் ஜெயம் ரவி.
அவருடைய பிறந்த நாளில் அவரை வாழ்த்தி நாமும் மகிழ்ந்து கொள்வோம்