டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு- பழனிசாமிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
டெண்டர் முறைகேடு குறித்த எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் ஒருவாரத்துக்கு ஒத்திவைத்துள்ளது.

அதிமுக ஆட்சியின்போது நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஒதுக்கீட்டில் ரூ.4,800 கோடி முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. புகார் தொடர்பாக சிறப்பு குழு அமைத்து விசாரிக்க கோரிய வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தது.
ஆர்.எஸ்.பாரதிக்கு ஆதரவாக கபில் சிபில் ஆஜரான நிலையில், தமிழ்நாடு அரசுக்காக கபில் சிபில் ஆஜராகக்கூடாது என பழனிசாமி தரப்பு ஆட்சேபம் தெரிவித்தது. இதையடுத்து டெண்டர் முறைகேடு குறித்த எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் ஒருவாரத்துக்கு ஒத்திவைத்துள்ளது.

அதிமுக ஆட்சிக்காலத்தில் கடந்த 2018 ஜூன் மாதம் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்திருந்தார். அந்த புகாரில், எடப்பாடி பழனிசாமி, அவரது உறவினர்கள், நண்பர்கள், பங்குதாரர்களாக உள்ள நிறுவனங்களுக்கு ரூ.4,800 கோடி ரூபாய் வரை டெண்டர் ஒதுக்கீடு செய்யபட்டு முறைகேடு நடந்திருப்பதாக குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆட்சி மாற்றம் காரணமாக புதிதாக விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என உத்தரவிட்டு, ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை ரத்து செய்தது என்பது குறிப்பிடதக்கது.


