கொரோனா காலத்தில் களத்தில் சிறப்பாக பணியாற்றிய செவிலியர்களுக்கு மீண்டும் பணி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.


பணி நிரந்தரக் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கொரோனா பேரிடர் காலத்தில் நியமிக்கப்பட்ட செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று அதிமுக சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆதரவு தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விஜயபாஸ்கர், “கொரோனா உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் தங்களது வாழ்வை அர்பணித்து பணியாற்றிய செவிலியர்களை இந்த அரசு உடனடியான பணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஒப்பந்த செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டது விதிமீறல் எதுவும் இல்லை. 9ம் தேதி தொடங்க உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பணி நீக்கப்பட்ட செவிலியர்களுக்கு மீண்டும் பணி அமர்த்தக்கோரி அதிமுக தரப்பில் குரல் எழுப்பப்படும். ஓமந்தூரார் மருத்துவமனையை கொரோனா மருத்துவமனையாக மாற்றியவுடன் அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் பயந்து ஓடி விட்டனர். மருத்துவமனை முதல்வர் மட்டுமே பணியில் இருந்தார். ஆனால் ஒப்பந்த செவிலியர்கள் கொரோனா முதல் அலையின்போதே, துணிந்து பணிக்கு வந்து பல உயிர்களை காப்பாற்றினர்.
ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வது என்பது சாதாரண ஒன்று, கொரோனா முழு கவச உடையுடன் இரவுப் பணி பார்த்தவர்களை பல ஊர்களில் நின்று போராடும் நிலைக்கு ஆளாகிவிட்டனர். 8,500 நபர்களுக்கு பணி அழைப்பு வழங்கப்பட்டபோது 300 நபர்கள்தான் பணிக்கு வந்தனர். பணியில் சேர 15 நாள் இடைவெளி கொடுத்தார் அவர்களும் மனம் மாறி விடுவார்கள் என்பதால், மூன்றே நாளில் பணிக்கு வரவேண்டும் என அழைப்பு கொடுத்தோம்” என பேசினார்.
