தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 13 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.


சட்டப்பேரவையில் முதலமைச்சர் உரையின்போது அதிமுக எம்.எல்.ஏக்கள் பாதியில் வெளியேறினர். ஆளுநரின் செயலை கண்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்தபோது அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளியேறினர். முதலில் எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் வெளியேறிய நிலையில், அதனை தொடர்ந்து ஓபிஎஸ்-ம் வெளியேறினார். எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை மாற்றப்படாததால், ஓபிஎஸ் அருகே எடப்பாடி பழனிசாமி இன்று அமர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஆளுநர் மற்றும் சபாநாயகர் உரைக்கு பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, “ அரசு தயாரித்த, ஆளுநரால் இசைவளிக்கப்பட்ட அச்சிடப்பட்ட உரையை ஆளுநர் முறையாக படிக்காதது வருந்ததக்கது.ஆளுநர் உரையை தொடங்குவதற்கு முன் எங்கள் எதிர்ப்பு எதையும் பதிவு செய்யவில்லை. ஆளுநருக்கு முழு மரியாதை அளித்து நாங்கள் கண்ணியத்துடன் நடந்துகொண்டோம்.அரசு தயாரித்த ஆளுநர் உரையின் பகுதியை மட்டுமே பேரவை ஆவணங்களில் பதிவேற்ற வேண்டும்” எனக் குற்றஞ்சாட்டினர். இதனால் முதலமைச்சர் ஸ்டாலின் சில விமர்சனங்களை முன்வைத்தபோது பேரவையில் இருந்து ஆளுநர் ரவி பாதியில் வெளியேறினார்.முறைப்படி சட்டப்பேரவைக் கூட்டம் முடியும் முன்னரே ஆளுநர் ரவி அவையிலிருந்து புறப்பட்டு சென்றார்.
அதன்பின் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “ஆளுநர் உரையில் புதிய பெரிய திட்டங்கள் எதுவுமில்லை. ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் தீர்மானம் கொண்டுவந்தது மரபு அல்ல. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது. சட்டப்பேரவையில் ஆளுநர் இருக்கும்போது முதலமைச்சர் பேசியது அவை மரபுக்கு எதிரானது. அநாகரீகமானது. ஆளுநர் உரையை கேட்க மட்டுமே வந்தோம். முதல்வர் உரையை கேட்க வரவில்லை” எனக் கூறினார்.
