தமிழ்நாடு அரசு தயாரித்து அச்சிட்ட உரையை முறையாக படிக்காதது, அச்சிடாத வாசகங்களை சேர்த்து வாசித்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.


சென்னை சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுக்கும் உரையை சட்டப்பேரவையில் ஆளுநர் படிப்பதுதான் மரபு. ஆனால் தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை ஆளுநர் முழுமையாக படிக்கவில்லை. பேரவையில் தான் படிக்கும் உரைக்கு ஆளுநர் ஏற்கனவே ஒப்புதல் வழங்கி உள்ளார். அரசின் உரையை ஆளுநர் மாற்றம் செய்வது மரபை மீறிய செயலாகும். ஐந்தாம் தேதியே அனுப்பிய உரைக்கு ஏழாம் தேதி ஆளுநர் ஒப்புதல் அளித்தார். அரசு தயாரித்த உரையை முழுமையாக ஆளுநர் ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டு அனுப்பிய பிறகு தான் உரை அச்சிடப்பட்டது. அச்சடிக்கப்பட்ட உரை மட்டுமே அவைக்குறிப்பில் இடம்பெறும்.
சமூகநீதி, சமத்துவம், சமூக நல்லிணக்கம், பெண் அடிமைத்தனம் ஒழிப்பு போன்ற வார்த்தைகளை ஆளுநர் தவிர்த்துவிட்டார். உரைக்கு ஏற்கனவே ஒப்புதல் அளித்துவிட்டு தற்போது சிலவற்றை தவிர்த்தது ஏன்? ஆளுநரின் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது. தேசிய கீதத்துக்கும் ஆளுநர் உரிய மரியாதை அளிக்கவில்லை. தேசிய கீதம் இசைக்கப்படும் முன்பே ஆளுநர் வெளியேறினார். ஆளுநரின் பேச்சை கண்டுக்க முடியாமல் அடிமை சாசனம் போல் அதிமுக வெளியேறியது அநாகரிகமானது. ஆளுநரின் செயல் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. அம்பேத்கர் பெயரை கூட சொல்ல ஆளுநர் ஆர்.என்.ரவி மறுத்துள்ளார். ஆளுநர் உரை என்பது அரசின் கொள்கைகளை விளக்கும் உரை. ஆளுநர் பேரவையில் உரையை வாசிக்கும்போது நடைமுறைக்கு மாறாக, அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணாகவும் வாசித்தார். நம்முடைய திராவிட மாடல் கொள்கைகளுக்கு முற்றிலும் மாற்றாக ஆளுநர் செயல்படுகிறார். எங்களது கொள்கைகளுக்கு மாறாக மட்டுமல்ல, அரசின் கொள்கைகளுக்கே கூட மாறாக ஆளுநர் நடந்து கொண்டார்” எனக் குற்றஞ்சாட்டினார்.
