தமிழ்நாட்டில் மக்களால் தேர்வான ஆட்சி இருக்கும்போது ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க . சித்தாந்தத்தை தமிழகத்தில் திணிக்க ரவி என்பவரை பொறுப்பில் அமர்த்தி இரட்டை ஆட்சி நடத்தும் முயற்சி நடைபெறுவதாக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி குழு தலைவர் கு.செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.


காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் சார்பில் படப்பையில் மாவட்ட ஆட்சிதலைவர் ஆர்த்தி தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் மும்மதத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்ற நிலையில் இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் என மும்மத வழிபாட்டு தளங்கள் அமைத்து அதன் நடுவே செங்கரும்பு சூழ பொங்கல் பனையில் பொங்கலிடு பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் சமத்துவ பொங்கல் கொண்டாட்டப்பட்டது. இங்கு மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு மிதி வண்டிகள், நூலகம் அமைக்க புத்தகங்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்த்தி, ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி குழு தலைவருமான கு.செல்வபெருந்தகை ஆகியோர் வழங்கினார்கள். மேலும் இந்த பொங்கல் விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மனோகரன், குன்றத்தூர் ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி மனோகரன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்துக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய சட்டமன்ற காங்கிரஸ் கட்சி குழு தலைவர் கு.செல்வபெருந்தகை, “தமிழ்நாட்டில் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஆட்சி ஒன்று நடைபெறும்போது, பொறுப்பு கொடுத்து மறுபுறம் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க சித்தாந்தத்தை தமிழகத்தில் திணிக்க ரவி என்பவரை அனுப்பியுள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் சட்டமன்றத்தில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றிய ஆன்லைன் சூதாட்ட தடை தீர்மானத்துற்கு பிறகு இன்றும் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு ஆளுநர் தான் பொறுப்பு. தமிழ்நாட்டை சேர்ந்த தமிழர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், திட்டங்கள் தள்ளிபோகலாம். தமிழ்நாட்டு கலாச்சாரம், பாரம்பரியம், வரலாற்றை பண்பாட்டை திரித்து அதனை முறியடிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அதனால் தமிழ்நாடு முதலமைச்சர் கரத்தை வலுப்படுத்திட வேண்டும்… வாழ்க தமிழ்நாடு” என்றார்.
