தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அம்மா உணவகங்களும் தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏழை எளிய மக்கள், அன்றாட கூலி வேலை செய்பவர்கள், ஓட்டுநர்கள், பாரம் தூக்குபவர்கள் குறைந்த ஊதியத்தில் பணிபுரிபவர்களும், என சென்னைக்கு பணி நிமித்தமாக வந்து செல்பவர்களும் பயன்பெறும் வகையில் சுகாதார மற்றும் தரமான உணவுகளை மலிவு விலையில் வழங்கும் வகையில், அம்மா உணவகங்களை முதற் கட்டமாக சென்னையில் துவக்கி வைத்து, அதனைப் படிப்படியாக அனைத்துப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தியவர் தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா. ஜெயலலிதாவால் துவக்கப்பட்ட இந்தத் திட்டம் அந்தந்தப் பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் காலையிலிருந்து இரவு வரை தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின்கீழ், தினந்தோறும் இலட்சக்கணக்கான ஏழை, எளிய மக்கள் பயன்பெற்று வந்த நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக ஏழை, எளிய மக்களுக்கான அம்மா உணவகங்கள் திட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கைகளை தி.மு.க. அரசு எடுத்து வருகிறது. ஜெயலலிதாவால் படிப்படியாக விரிவாக்கப்பட்ட அம்மா உணவகம் திட்டத்தை படிப்படியாக குறைக்கும் நடவடிக்கையையும், அங்கு பணிபுரியும் ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பும் நடவடிக்கையையும் தி.மு.க. அரசு எடுத்து வருகிறது. இது குறித்து பலமுறை நான் அறிக்கை விடுத்தும், தன்னுடைய நிலைப்பாட்டை தி.மு.க. அரசு மாற்றிக் கொண்டதாகத் தெரியவில்லை.

உண்மையிலேயே, அம்மா உணவகம் அமைந்திருக்கும் கட்டடம் சிதிலமடைந்திருந்தால் அதனை அருகில் உள்ள வேறு கட்டடத்திற்கு மாற்றிவிட்டு, புதிதாக கட்டடப் பணிகளை துவக்குவதுதான் முறையாக இருக்கும். இது தான் நிர்வாகத் திறமைக்கு எடுத்துக்காட்டாக இருக்கும். மாறாக, அம்மா உணவகத்தையே மூடுவது என்பது மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவதற்கு சமம். இது அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு எடுத்துக்காட்டு. ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால், தி.மு.க. அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள். தி.மு.க. அரசின் இந்த மக்கள் விரோதச் செயலுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, மணியனூர் அம்மா உணவகம் அங்கே தொடர்ந்து செயல்படவும், உள்ளூர் தி.மு.க.வினர் இதில் தலையிடுவதை தடுத்து நிறுத்தவும், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அம்மா உணவகங்களும்-தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
