தமிழ்நாடு முதலமைச்சரை தேநீர் விருந்திற்கு அலைபேசியில் அழைத்தாலும் அல்லது தாம்பூலம் வைத்து அழைத்தாலும் அதில் கலந்துகொள்ளததே சரி என்று துரை வைகோ தெரிவித்துள்ளார்.
ஆவடியில் மொழிப்போர் தியாகி வீரவணக்கம் நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு உரையாற்றினார்.

சென்னை புறநகர் பகுதியான ஆவடி மாநகராட்சி அருகே மொழிப்போர் தியாகி வீரவணக்கம் நாள் பொதுக்கூட்டம் மாநிலத் தேர்தல் பணி செயலாளர் அந்திரிதாஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மொழிப்போர் தியாகிகளுக்கு தலைமை கழகச் செயலாளர் துரை வைகோ கட்சியின் கொடியேற்றி மலர் தூவி ஜோதி தீபம் ஏற்றி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் ஆவடி மாநகராட்சி துணை மேயர் சூர்யா குமார் வரவேற்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மதிமுக கட்சி மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளும் நகரம் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ, தமிழ்நாடு என்ற பெயருக்காக பல பேர் உயிர் தியாகம் செய்திருக்கிறார்கள். சங்கரலிங்கம் நாடார் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து இறந்துவிட்டார்.
தமிழ்நாடு என்பது வெறும் பெயர் கிடையாது அது உணர்வு. அதை கொஞ்சம் கூட தெரிந்து கொள்ளாமல் தமிழ்நாடு என்று அழைப்பதற்கு பதிலாக தமிழகம் என்று அழைத்தது மட்டுமில்லாமல் பல நிகழ்வுகளில் அதுதான் சரி என்று சொல்லி ஆளுநர் பேசினார்.

மேலும் சட்டமன்றத்தில் இந்திய அரசியல் சட்டத்தை வடிவமைத்த அண்ணல் அம்பேத்கர், சமூக நீதியை கற்றுக்கொடுத்த தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கர்மவீரர் காமராஜர் ஆகியோர்களின் பெயர்களை எல்லாம் திட்டமிட்டு வாசிக்காமல் வெளிநடப்பு செய்தார். இது தமிழ்நாட்டையும், தமிழர்களையும் அவமரியாதை செய்தவர்.

இப்படிப்பட்ட ஆளுநரை தமிழ்நாட்டு வரலாற்றிலே இதுவரை பார்க்கவில்லை என்று துரை வைகோ கூறினார்.
முதலமைச்சரை தேநீர் விருந்திற்கு அலைபேசியில் அழைத்தாலும் அல்லது தாம்பூலம் வைத்து அழைத்தாலும் சரி அந்த நிகழ்ச்சியை புறக்கணித்தது தான் சரி என்று தெரிவித்தார்.
