அமெரிக்க அருங்காட்சியகத்தில் ஆபரண கண்காட்சி
அகழாய்வில் கிடைத்த ஆபரணங்கள் முதல் மன்னர்கள் கால ஆபரணங்கள் வரை கண்காட்சியில் வைக்கப்படுவதை பார்த்திருப்போம். ஆனால் நவீன காலத்தை காட்டும் ஆபரணங்களின் கண்காட்சி அமெரிக்கா அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

நியூயார்க்கில் உள்ள இயற்கை வரலாற்று தேசிய அருங்காட்சியகம் உலகப் புகழ் பெற்றது. உலகில் உள்ள பாலூட்டிகள் ஒவ்வொரு கண்டத்திலும் இருக்கும் உயிரினங்கள், பறவை இனங்கள், கடல் வாழ் உயிரினங்கள், டைனோசர்கள் போல அழிந்து போன விலங்குகளின் படிமங்கள் என மிக பிரம்மாண்டமான அருங்காட்சியகம் இது.
விலங்குகள் மட்டுமல்ல இன்றைய நவீன மனிதனின் பழங்கால படிமம் வரை அனைத்தும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
இங்குள்ள அரங்கு ஒன்றில் ஹிப் ஹாப் கலைஞர்களின் தாக்கத்தை காட்டும் கண்காட்சி திறக்கப்பட்டுள்ளது. ராப் மற்றும் ஹிப் ஹாப் இசையில் கோலூன்றி இருக்கும் ஸ்லிக் ரிக், நிக்கி மினாஜ், A$AP ராக்கி உள்ளிட்டோர் கலை நிகழ்ச்சிகளில் பயன்படுத்திய ஆபரணங்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளன.
இசையில் ஹிப் ஹாப் என்ற ஒரு பாணி உருவாகி கடந்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. இதனை ஒட்டியே ஹிப்ஹாப் சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் ஏற்படுத்தி உள்ள கலாச்சார மாற்றங்களை காட்டும் வகையில் இந்த கண்காட்சி திறக்கப்பட்டு இருக்கிறது.