மணிமுத்தாறு அருவி மாஞ்சோலை செல்ல தடை
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மற்றும் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே மணிமுத்தாறு அருவி, தலையணை, மாஞ்சோலை, நம்பி கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை மறு உத்தரவு வரும் வரை தொடரும் என நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.
மேற்கு தொடர்ச்சி மலை ஆறுகள் மற்றும் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. பொதுமக்கள் தாமிரபரணி ஆறு, கடனா, சிற்றாறு, நம்பியாறு, அனுமன் நதி உள்ளிட்ட ஆறுகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள், காட்டாறுகள் மற்றும் மழை காரணமாக ஏற்படும் தற்காலிக அருவிகள் என எந்த ஒரு நீர்நிலைக்குள்ளும் இறங்க வேண்டாம். கால்நடைகள், வாகனங்களையும் இறக்க வேண்டாம்.
கடற்கரை ஓரங்களில் அலையின் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் கடற்கரைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் மழை நேரங்களில் மரங்கள்/ மின்கம்பங்கள் அருகிலோ வெட்டவெளியிலோ நிற்கக்கூடாது. கால்நடைகளையும் இது போன்ற இடங்களில் கட்டி வைக்க கூடாது. பழுதடைந்த கட்டிடங்கள், சிலாப்புகள் அருகில் செல்லக்கூடாது. ஆபத்தான நிலையில் கட்டிடம் இருந்தால் அதனை உரிய வழிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக அகற்றிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் துண்டிக்கப்பட்டாலோ மின் வயர்கள் அறுந்து கிடந்தாலோ உடனடியாக மின்னகம் உதவி மையத்திற்கு (94987 94987) தகவல் தெரிவிக்க வேண்டும்.
மாவட்ட பேரிடர் மேலாண்மை உதவி மையத்தை 1077 என்ற எண்ணிலும், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் உதவி மையத்தை 101 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.