விழுப்புரத்தில் அரசு பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களை கண்டித்த நடத்துநரை மது போதையில் இரண்டு இளைஞர்கள் தாக்கி கொலைமிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரத்திலிருந்து பண்ருட்டி நோக்கி சென்ற அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயணம் செய்துள்ளனர். அப்போது பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள் உள்ளே செல்லாமல் படிக்கட்டில் தொங்கியவாறும், சாலையில் கால்களை தேய்த்தபடி ஆபத்தான முறையில் பயணம் செய்துள்ளனர்.
இதனை கவனித்த பேருந்தின் நடத்துநர் மதன் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவர்களை கடுமையாக எச்சரித்து உள்ளே ஏறி வரும்படி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் பேருந்தில் நடந்த சம்பவம் மற்றும் நடத்துநர் தங்களை கண்டித்தது குறித்து செல்போன் மூலம் தங்களது ஊர் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து பேருந்து ப.வில்லியனூர் பேருந்து நிறுத்தத்திற்கு வந்தபோது மது போதையில் இருந்த இரு இளைஞர்கள் பேருந்தில் ஏறி நடத்துநர் மதனிடம் தகராறில் ஈடுபட்டு அவரை கடுமையாக தாக்கியும் பேருந்தை கண்ணாடியை உடைத்து நடத்துநருக்கு கொலைமிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்த தாக்குதல் பேருந்தில் பயணம் செய்த பயணிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியது. மேலும் போதையில் இருந்த அந்த இளைஞர்கள் பேருந்தில் இருந்து கீழே இறங்கியபின், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தாக்குதலில் காயமடைந்த நடத்துநர் மதன் சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ள நிலையில் இச்சம்பவம் குறித்து விழுப்புரம் மாவட்டம் வளவனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து வளவனூர் போலீசார் பேருந்து நடத்துநரை மது போதையில் தாக்கிய அய்யனாரை மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
